இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவம்!

pakistan-india-kashmirகாஷ்மீர் மாநிலத்துக்கு சொந்தமான லடாக் டிவிஷன், சீன எல்லை ஓரம் அமைந்துள்ளது. அங்குள்ள சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், லே பகுதிக்கு 250 கி.மீ. கிழக்கே உள்ள டெம்சோக் செக்டார் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், நீர்ப்பாசன கால்வாய் ஒன்றை இந்தியா கட்டி வருகிறது. நேற்றுமுன்தினம் அப்பணி நடந்து கொண்டிருந்தபோது, பிற்பகலில், சீன ராணுவ வீரர்கள் 55 பேர், எல்லையை தாண்டி அத்துமீறி அங்கு வந்தனர். அவர்கள் கட்டுமான பணியை அதிகார தோரணையுடன் தடுத்து நிறுத்தினர்.

இந்த தகவல் அறிந்து, இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த சுமார் 70 பேர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சீன படைகளின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இரு நாட்டு படைகளும் நேருக்குநேர் அணி திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீன படைகள் மேற்கொண்டு ஒரு அங்குலம் கூட முன்னேறி வர விடாமல் இந்திய ராணுவம் தடுத்ததால், சீன படையினர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு பின்வாங்கி சென்றனர். அங்கு மோதலுக்கு தயார் ஆவதுபோல் நின்று கொண்டனர்.

எந்த பணியை செய்வதாக இருந்தாலும், ஒருதரப்பு மற்றவரின் அனுமதியை பெற வேண்டும் என்பதால், கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்று சீன படைகள் வற்புறுத்தின. ஆனால், இந்திய ராணுவம் அதை ஏற்கவில்லை. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கட்டுமான பணியாக இருந்தால் மட்டுமே தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.

பின்னர், இரு நாட்டு படைகளும் பனி மலையில் இருந்து கீழே இறங்கி, தரைப்பகுதியில் நிலை கொண்டன.

இதற்கிடையே, டெல்லியில், இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி விளக்கம் அளித்தனர். மோதல் போக்கு எதுவும் உருவாகவில்லை என்றும், இதுபோன்ற ஆட்சேபனைகள் எழுவது வழக்கமானதுதான் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த பிரச்சினை, ஏற்கனவே வகுக்கப்பட்ட வழிமுறைகளின்படி தீர்க்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டும், லடாக் டிவிஷனில், நிலங் நல்லா என்ற இடத்தில் சிறிய நீர்ப்பாசன கால்வாய் கட்டுவதற்கு சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே முகாமிட்டது.