“நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்”- திருக்குர்ஆன்

இறைவன் ஃபிர்அவ்ன் கூட்டத்தினருக்குத் தந்த சோதனைகளை மூஸா (அலை) தம் பிரார்த்தனைகளின் மூலம் நீக்கினார்கள். இருப்பினும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் பனூ இஸ்ராயீலர்களுக்கு மாறு செய்தனர்.

மூஸா (அலை) இரவோடு இரவாகச் சென்று விடலாம் என்று முடிவு செய்து இறைநம்பிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள். யாருக்கும் தெரியாமல் இரகசியமாகத் தமது உடமைகளை முடிந்தவரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

அவர்கள் எகிப்தைவிட்டு செல்வது பற்றி ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்கு மறுநாள் காலையில் தெரிந்துவிட்டது. அவர்கள் அதனை ஃபிர்அவ்னுக்குத் தெரிவித்துவிட்டனர். ஃபிர்அவ்ன் தம் படைகளைத் திரட்டிக் கொண்டு மிக வேகமாக அவர்களைத் தேடிப் புறப்பட்டான்.

ஃபிர்அவ்ன் கூட்டத்தைச் சேர்ந்த ஓர் இறைநம்பிக்கையாளர் விரைந்து வந்து இந்தச் செய்தியை பனூ இஸ்ராயீலர்களுக்குத் தெரிவித்தார். உடனே பனூ இஸ்ராயீலர்கள் மூஸா (அலை) அவர்களைக் குறைச்சொல்ல ஆரம்பித்தார்கள் “உங்கள் பேச்சைக் கேட்டு நாங்கள் வெளியேறினோம். இப்போது என்ன செய்யப் போகிறோம்? ஃபிர்அவ்ன் நம்மைக் கண்டுபிடித்து எல்லோரையும் கொலை செய்துவிடப் போகிறான். நாம் எகிப்திலேயே தங்கியிருந்தால் ஃபிர்அவ்னின் கொடுமைகளுக்கு ஆளாகியிருப்போம், ஆனால் உயிர் மிஞ்சியிருக்கும். இப்போது உயிரையே இழக்கப் போகிறோம்” என்று பீதியில் இருந்த மக்கள் இறைநம்பிக்கையை இழந்து பேசினார்கள்.

மனம் தளராத மூஸா (அலை) அவர்கள் “பயப்படாதீர்கள்! ஃபிர்அவ்னிடமிருந்து நம்மைக் காப்பாற்றி இவ்வளவு தூரம் கொண்டு வந்த நம் இறைவன் துணையிருப்பான்” என்று வேகமாகத் தம் கூட்டத்தினருடன் நகர்ந்தார்கள். அப்போது செங்கடல் குறுக்கிட்டது. “நதியை எப்படி நாம் எப்படிக் கடக்கப் போகிறோம். சிக்கிவிட்டோம், ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் நெருங்கிவிட்டனர்” என்று பயத்தில் அழத் தொடங்கிவிட்டனர்.

unknownஇறைவன் மூஸா (அலை) அவர்களைத் தம் கைத்தடியைக் கொண்டு தரையை அடிக்கும்படி கட்டளையிட்டான். மூஸா (அலை) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். கடல் இரண்டாகப் பிளந்தது. கடல் பிளந்து அவர்களுக்கு வழி விட்டது. மூஸா (அலை) மற்றும் அவர்கள் கூட்டத்தினர் அதில் நடந்து கடந்து சென்றாகள். பின்னால் துரத்தி வந்த ஃபிர்அவ்ன் இந்த அதிசயத்தைக் கண்டு வாய்பிளந்து, தம் கூட்டத்தினரிடம் தான் சொன்னதன் பேரில்தான் கடல் பிளந்துள்ளது என்று பொய்யுரைத்தான்.

மூஸா (அலை) மற்றும் அவர்களுடைய கூட்டத்தார் அக்கரையை எளிதாக அடைந்தார்கள்.

ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் நடுக்கடலை அடைந்ததும் கடல் மூடுவதைக் கண்ட ஃபிர்அவ்ன் “இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த இறைவனின் மீது நம்பிக்கைக் கொண்டார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் நம்பிக்கைக் கொள்கிறேன், இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். ஆனால் அவனுடைய பாவ மன்னிப்பு ஏற்கப்படவில்லை. ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் கடலில் மூழ்கடிக்கப்பட்டார்கள்.

ஃபிர்அவ்னை மூழ்கடித்ததில் அத்தாட்சி உள்ளதாக, திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் “உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” என்று திருக்குர்ஆனின் இறைவசனத்திற்கேற்ப, பல்லாயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் கண்டெடுக்கப்பட்டுத் தற்போது எகிப்து நாட்டின் கெய்ரோ நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. 

திருக்குர்ஆன் 26:52-68, 10:88-92