ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு கண்டிப்பாக நடத்த வேண்டும்- உயர்நீதிமன்றம்

eu_no_ukஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கலாமா? அதிலிருந்து வெளியேறலாமா? என்பது குறித்து கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெளியேறலாம் என்று 52 சதவீதம் பேரும், நீடிக்கலாம் என 48 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

இதைத்தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. என்றபோதிலும், பொதுவாக்கெடுப்பின் முடிவை இங்கிலாந்து அரசியல்வாதிகள் சிலரிடையே எதிர்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்பது குறித்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று அந்நாட்டு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெளியேறுவதற்கான முறைப்படியான பேச்சுவார்த்தையை ஐரோப்பிய யூனியனுடன் தொடங்குவதற்கு அந்நாட்டு சட்டப்பிரிவு 50-ன் படி பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 

இதனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை தொடங்குவதில் அந்நாட்டு அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுவாக்கெடுப்பு என்றால் அதில் எம்.பி-க்கள் வாக்களிக்க தேவையில்லை என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கூறுகிறார். ஆனால், எதிர் பிரச்சாரக்காரர்கள் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் இங்கிலாந்து நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களால் பாதிக்கப்படுவதாக கூறிதான் வெளியேறுவது என்ற கருத்து உருவானது. அதேபோல், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினால் இங்கிலாந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் என்று எதிர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.