இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற வங்காள தேசம் – தொடரை 1-1 என சமன் செய்தது

254244

வங்காள தேசம் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தடுமாறிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று முன்தினம் (28-ந்தேதி) தொடங்கியது.

டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் தமீம் இக்பால் சதம் (104) அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி முதல் இன்னிங்சில் 220 ரன்னில் சுருண்டது.

254253

பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 19 வயதே ஆன இளம் பந்து வீச்சாளரான மெஹெதி ஹசன் மிராஸின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 244 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் அதிகபட்சமாக 56 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் அணி சார்பில் மெஹெதி ஹசன் மிராஸ் 6 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

பின்னர் 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தமீம் இக்பால் (40), இம்ருல் கெய்ஸ் (78), மெஹ்முதுல்லா (47), சாஹிப் அல் ஹசன் (41) ஆகியோர் குறிப்பிடும்வகையில் ரன்கள் சேர்க்க வங்காள தேசம் 2-வது இன்னிங்சில் 296 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் 24 ரன்கள் பின்தங்கியதால் 2-வத இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்தை விட 272 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் குக் மற்றும் டக்கெட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரைசம் அடித்தனர். 56 ரன்கள் எடுத்த நிலையில் டக்கெட் மெஹெதி பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு சரியாக 100 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன்பி்ன் வந்த ஜோ ரூட்டை 1 ரன்னில் சாஹிப் அல் ஹசன் வெளியேற்ற, பின்னர் வந்த பேலன்ஸ் (5), மொயீன் அலி (0) ஆகியோரை விரைவில் வெளியேற்றினார் மெஹெதி. அதோடு மட்டுமல்ல, அரைசதம் அடித்து களத்தில் நின்றிருந்தத குக்கை 59 ரன்னில் வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி கடைசி 28 ரன்னில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

இதனால் இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி சரிய ஆரம்பித்தது. மெஹெதியின் அபார பந்து வீச்சால் பேர்ஸ்டோவ் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். முதல் இன்னி்ங்சில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மெஹெதி பேர்ஸ்டோவ் விக்கெட்ட் மூலம் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 161 ரன்னாக இருக்கும்போது சாஹிப் அல் ஹசன் பென் ஸ்டோக்ஸ் (25), ரஷித் (0), அன்சாரி (0) ஆகியோரை ஒரே ஒவரில் அவுட் செய்தார். கடைசி விக்கெட்டாக களம் இறங்கிய ஸ்டீவன் பின்னை மெஹெதி டக்அவுட்டில் வீழ்த்த இங்கிலாந்து அணி 164 ரன்னில் சுருண்டது.

இதனால் வங்காள தேசம் 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெஹெதி 6 விக்கெட்டும், சாஹிப் அல் ஹசன் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் வங்காள தேசம் இங்கிலாந்து அணிக்கெதிராக முதல் வெற்றியை பெற்று வரலாற்றி சாதனைப் படைத்துள்ளது. அத்துடன் தொடரையும் 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.