அமீர் அலியை முதலமைச்சராக்கி மு.காவை கிழக்கிலிருந்து முற்றாகத் துடைத்தெறிய புதிய வியூகம் ?

rishad ameer ali mahroof

 

கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கைத் துடைத்தெறிந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதில் ஒரு பகுதியாக கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வியூகம் ஒன்றை வகுத்துள்ளது.

அந்த வியூகத்தின் அடிப்படையில் அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி தற்போது மத்திய அரசில் பிரதி அமைச்சராக இருக்கும் எம்.எஸ்.அமீர் அலியை முதலமைச்சராக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் மாத்திரமே இது சாத்தியப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கருதுவதால் அதற்கான காய்நகர்த்தல்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துடன் முரண்பட்டுக் கொண்டு நிற்கும் அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அமீர் அலியை எப்படியாவது முதலமைச்சராக்கி தலைமைத்துவத்தைப் பலிவாங்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் அமீர் அலி மயிரிழையில் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் இந்த முக்கியஸ்தர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவருக்கென்று நிலையாக இருக்கின்ற தமிழர்கள் சிலரின் வாக்குகளை இறுதித் துருப்புச் சீட்டாக பயன்படுத்தி அமீர் அலியின் வெற்றியை அவர் உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மு.காவின் தலைமைத்துவம் இவருக்கு இடம் கொடுக்காமைக்குப் பலிவாங்கும் விதத்திலேயே அவர் அமீர் அலியை வெல்ல வைப்பதற்கு இரகசியமாக வேலை செய்தார்.

இப்போது அமீர் அலியை கிழக்கின் முதலமைச்சராக்கி மு.காவின் செல்வாக்கை கிழக்கில் இருந்து முற்றாகத் துடைந்தெறிவதென்று அவர் திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கில் மு.காவுக்கு எதிராகக் களமிறங்கிய ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பிலும் திருகோணமையிலும் தலா ஓர் ஆசனத்தைக் கைப்பற்றியது.

அம்பாறையில் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து ரிஷாத் பதியுதீன் கிழக்கில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.

மு.காவை முந்திக்கொண்டு அவர் பல விடயங்களை செய்வதற்கு எத்தனிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மு.காவை கிழக்கில் முற்றாக ஓரங்கட்டுவதற்கு ரிஷாத் பதியுதீனால் வகுக்கப்பட்டு வரும் வியூகங்களில் ஒன்றாகவே கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றி அமீர் அலியை முதலமைச்சராக்கும் திட்டம் அமைந்துள்ளது என்று அமீர் அலியுடன் நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.