மத்திய அரசின் கண்காணிப்பு பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த பிரபல இஸ்லாமிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் தந்தையான டாக்டர் அப்துல் கரிம் நாயக் இன்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.
வங்காளதேச தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் கடந்த ஆகஸ்ட் மாதம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும் ஜாகிர் நாயக்கின் பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகளை மத்திய மற்றும் மராட்டிய மாநில புலனாய்வு போலீசார் தீவிரமாக ஆராய்ந்துவந்த நிலையில், ஜாகிர் நாயக்கை கைது செய்ய வேண்டும் என்றும் சிவசேனா கட்சி வலியுறுத்தியது.
நான் எந்த வடிவிலும் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரித்தது இல்லை எனவும், இது தொடர்பாக தன்னிடம் விளக்கம் கேட்டு இந்திய அதிகாரிகள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஜாகிர் நாயக் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், இஸ்லாமிய மதப் பிரச்சாரம் செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யச் சென்ற ஜாகிர் நாயக், இந்தியாவுக்கு திரும்பி வராமல் வெளிநாட்டில் தங்கியுள்ளார்.
இதற்கிடையில், ஜாகிர் நாயக் மற்றும் அவரது ‘பீஸ் பவுண்டேஷன்’ அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக ரகசிய விசாரணை நடத்திய மத்திய உள்துறை அமைச்சகம், விசாரணையின் முடிவுகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்தது. அந்த கோப்பு பிரதமர் மோடியின் முடிவுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு தடை விதிக்கப்படலாம், அவர் இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என்பது போன்ற யூக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஜாகிர் நாயக்கின் தந்தையான டாக்டர் அப்துல் கரிம் நாயக்(87) இன்று அதிகாலை மாரடைப்பால் மும்பையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி யாத்திரையும், உடல் அடக்கமும் மும்பையில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் பிறந்து மனநல சிகிச்சை நிபுணராக விளங்கிய அப்துல் கரிம் நாயக், முன்னர் கல்வியாளராக சமூகச் சேவையில் ஈடுபட்டார். மும்பை மனநல மருத்துவர்கள் சங்கத்தின் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தந்தையின் இறுதி யாத்திரையில் ஜாகிர் நாயக் பங்கேற்கவில்லை என அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.