இலவச உம்ரா- 4ஆவது குழு இன்று மக்கா நோக்கி பயணம்!

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் இலவசமாக உம்ரா கடமைக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தின், 100 பேர் அடங்கிய 4ஆவது குழு இன்று வியாழக்கிழமை புனித மக்கா நகர் நோக்கி புறப்பட்டது.
img-20161027-wa0007_fotor
இந்த உம்ரா குழுவை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் மட்டக்களப்பு கெம்பஸ் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு, குழுவில் பயணிக்கும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களை வழியனுப்பி வைத்தனர். 
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய, சமூகத்தின் எழுச்சிக்காக தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள உலமாக்களை கௌரவிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் முன்னெடுத்து வருகின்றது.  
img-20161027-wa0009_fotor
அந்தவகையில், ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனியின் வழிகாட்டலில்  பள்ளிவாயல்களில் சேவையாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட, இதுவரைக்காலமும் ஹஜ் அல்லது உம்ரா கடமையினை நிறைவேற்றாத, இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் 500 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக உம்ரா செல்வதற்கான வசதிகளை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செய்து கொடுத்துள்ளது.  
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே தலா 100 பேர் அடங்கிய மூன்று குழுக்கள் உம்ரா கடமையினை நிறைவேற்றியது. இந்நிலையில், 100 பேர் அடங்கிய 4ஆவது குழுவே இன்று புனித மக்கா நகர் நோக்கி புறப்பட்டது. மேலும் 100 பேர் அடங்கிய 5ஆவதும் இறுதியுமான குழு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி உம்ரா கடமைகளுக்காக புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 
img-20161027-wa0017_fotor