“வடபுலமே எங்கள் தாயகம்” மீளக்குடியேறும் உரிமையை எவரும் தடுக்க முடியாது – றிசாத்

சுஐப் எம்.காசிம்        

 

(முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும், கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்,  அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்திருக்கும் செய்தி)

வடமாகாணத்திலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு 26 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த கால்நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் முஸ்லிம் அகதிகள் பட்ட துன்பங்களும், துயரங்களும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. “அகதிகள்” என்றால் “கதியற்றவர்கள்” என்று பொருள்படுகின்றது. எல்லாவற்றையும் இழந்து, உடுத்த உடையுடன் நாம் தென்னிலங்கையில் நிர்க்கதியாகத் தஞ்சம் அடைந்தோம். 

rishad bathiudeen

சில மணி நேர அவகாசங்களுக்குள் வெளியேற வேண்டுமென்று புலிகளால் எமக்கு நிபந்தனை விதிக்கப்பட்டதால் எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் கடல்மார்க்கமாக பாதுகாப்பற்ற சிறிய படகுகளிலும், வள்ளங்களிலும், தரை மார்க்கமாக கால்நடையாகவும், கிடைத்த வாகனங்களிலும் தென்னிலங்கைக்கு வந்து சேர்ந்தோம்.

புத்தளத்திலும், அனுராதபுரத்திலும், குருநாகலிலும் நாம் தஞ்சமடைந்து அகதி முகாம்களில் வாழ நேரிட்டது. நிர்க்கதியான எங்களை பரோபகாரிகளும், அந்தந்த இடங்களில் வாழ்ந்த முஸ்லிம் சகோதரர்களும், பள்ளிவாசல் நிர்வாகமும், சமூகநல நிறுவனங்களும் அரவணைத்து, ஆசுவாசப்படுத்தி மாற்றுடை வழங்கி, உணவு தந்து பராமரித்தனர். எமக்கு உதவியோரை எங்கள் சந்ததியினர் என்றுமே மறக்கவும் கூடாது, மறக்கவும் மாட்டாது. சொந்த இடங்களிலே தொழில் செய்தவர்கள், வந்த இடங்களிலே கூலி வேலை செய்து பிழைக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

அகதி முகாமிலே அவல வாழ்வை அனுபவித்தவர்களில் நானும் ஒருவனே.  பாடசாலை மாணவனாக இருந்த நான் அகதி வாழ்க்கையுடன் போராடி, கல்வி பெற்று உயர்நிலை அடைந்தேன். அகதி முகாமில் நமது சொந்தங்கள் அனுபவித்த கொடூரங்களையும், கொடுமைகளையும் கண்டு மனம் வெதும்பினேன். இவ்வாறு துன்பப்படும் அகதிச் சமூகத்துக்கு விடிவு கிடைக்காதா என்று, நான் கவலையுடன் இருந்தபோதே, இறைவன் எனக்கு அரசியலில் ஈடுபடும் விருப்பைத் தந்தான். என்னை சரியாக வழி காட்டினான். அரசியலுக்குள் நுழைந்து, பாராளுமன்ற உறுப்பினராகி, அமைச்சராகி, அரசியல் கட்சி ஒன்றின் தலைவராகும் அளவுக்கு இறைவன் எனக்கு அருள் புரிந்தான். எனக்குக் கிடைத்த பதவியும் பட்டமும் இறைவனின் நாட்டமே.

எனக்குக் கிடைத்த பதவிகளையும், அதிகாரங்களையும் நான் இறைவனுக்குப் பொருத்தமான முறையில் பயன்படுத்தி வருகின்றேன். எனது மனச்சாட்சிக்கு மாற்றமாக நான் என்றுமே செயற்பட்டதில்லை.  பாதிக்கப்பட்ட அகதி முஸ்லிம் சமூகத்துக்காக எனது பதவியை பயன்படுத்துவதோடு, சகோதர இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் என்னால் முடிந்த வரை தீர்வுபெற்றுக் கொடுத்து வருகின்றேன். யுத்த காலத்தில் உயிர் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது, அந்தப் பிரதேசங்களுக்குச் சென்று மக்களின் நலனுக்காக நான் உழைத்திருக்கின்றேன்.

தற்போது யுத்தம் முடிவடைந்து நாம் மீள்குடியேறச் செல்லும் போது, பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டி நேரிடுகின்றது. வடமாகாணத்தில் வாழும் தமிழர்களில் பலர் எமது மீள்குடியேற்ற முயற்சிக்கு ஆதரவளித்த போதும், இரண்டு பெரும்பான்மையினங்களைச் சேர்ந்த இனவாதிகள் எமக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளைப்  போடுகின்றனர். வன்னி மக்களின் பிரதிநிதியான நான், மீள்குடியேற்றத்தை முன்னின்று செயற்படுத்துவதால் என்மீது சேற்றை வாரிப் பூசி, என் குரல் வளையை நசுக்க வேண்டுமென முயற்சிக்கின்றனர். அத்துடன் அரசியல் ரீதியில் காழ்ப்புணர்வு கொண்ட அத்தனை சக்திகளும் எனக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு என்னை எப்படியாவது அரசியலிலிருந்து ஓரங்கட்டச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இறைவனின் உதவி இருக்கும் வரை இந்த சக்திகளால் எனது செயற்பாடுகளை முடக்க முடியாது.    

வடமாகாணத்தில் நாம் வாழ்ந்த பூர்வீகக் காணிகளை துப்புரவாக்கும் போது, இயற்கை வளங்களை நாசமாக்குவதாகவும், வில்பத்துவை ஆக்கிரமிப்பதாகவும் குற்றஞ்சாட்டி, அதற்கு மூலகர்த்தா நான் என கதைகளைச் சோடித்து வீண்பழி சுமத்துகின்றனர். எமக்கெதிராக பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். தினமும் வழக்குகளிலேயே எமது காலம் கழிகின்றது. 

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து, பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அன்று வாய் திறக்கவில்லை. சர்வதேசமும் முஸ்லிம்கள் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. சர்வதேச நாடுகள் எமது பிரச்சினையை இற்றைவரை கருத்திற்கெடுத்ததாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் நாம் எமது சொந்த முயற்சியினால் மீள்குடியேற எத்தனிக்கும் போது, பல்வேறு தடைகளைத் தாண்டவேண்டி இருக்கின்றது. 

கடந்த காலங்களிலும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஆங்காங்கே நடைபெற்ற போதும், அதில் எமக்கு வெற்றி கிடைக்கவில்லை. காரணம் அந்தச் செயற்பாடுகளைத் திட்டமிட்டு மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. முறையான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை.    

இந்த நிலையில்தான் நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் விடுத்த கோரிக்கைகளினாலும், அழுத்தங்களினாலும் நமக்கு மீள்குடியேற்ற செயற்பாடுகளில் ஒரு புதிய தெம்பு பிறந்திருக்கின்றது. ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சரவையின் அனுமதியுடன் மீள்குடியேற்ற விஷேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கான ஆரம்ப முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருவதை நான் மிகுந்த சந்தோஷத்துடன் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றேன். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர்.  

புதிதாக அமைக்கப்பட்ட இந்தச் செயலணியின் மூலம் வடமாகாணத்தில் முறையான மீள்குடியேற்ற செயற்பாடுகளும், வாழ்வாதாரத்துக்கான பல்வேறு வாய்ப்புக்களும் ஏற்படுமென நாம் திடமாக நம்புகின்றோம். இதன் மூலம் அகதி முஸ்லிம் சமூகம் விமோசனம் அடையுமென்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. 

நாம் வாழ்ந்த பிரதேசங்களில் மீண்டும் குடியேறி வாழ்வது நமது உரிமை. எவரும் எமக்குத் தடைபோட முடியாது. வடபுலத்திலிருந்து ஒட்டுமொத்தமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்கள், இன்று ஆங்காங்கே சிதறி வாழ்கின்றனர். 26 வருட வாழ்க்கை, இவர்களின் வாழ்வில் பல்வேறு மாற்றங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்தியுள்ள போதும், நாம் வாழ்ந்த பிரதேசத்தில் மீளக்குடியேறுவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  மீளக்குடியேற முயற்சிப்போருக்கு உதவ வேண்டும். இதுவே இந்த சந்தர்ப்பத்தில் நாம் விடுக்கும் அன்பான வேண்டுகோள் ஆகும்.