முதலமைச்சரின் கோசங்களுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்கள் இணைந்த வட-கிழக்கினை ஏற்படுத்தும் போது தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பலப்படுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் நேற்று(22) மாலை நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாங்கள் எமது கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் என்பவற்றோடு இணைந்துதான் வாழ்ந்து வருகின்றோம். எமது தமிழ்த் தேசிய இனம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு தனித்துவமான இனமாக வாழ்ந்தது மாத்திரமல்ல அவர்களது கலை, கலாசாரத்தையும் வளர்த்து வந்திருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு என்பது நாட்டின் ஒரு முக்கியமான மாவட்டமாகும். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அடுத்ததாக தமிழ் மக்கள் கூடுதலான அளவில் வாழ்கின்ற மாவட்டமாகும். கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள்.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் வேறு மாகாணங்களிலும் பார்க்க கூடுதலான அளவு கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினத்தவர்களின் குடியேற்றம் நடைபெற்றிருக்கின்றது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் பெரும்பான்மையினத்தவர்களின் குடியேற்றங்கள் கூடுதலான அளவில் இடம்பெற்றன.
நாடு சுதந்திரமடைந்த 1947ஆம் ஆண்டு காலம் தொடங்கி 1981ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்த நாட்டில் பெரும்பான்மையினத்தவரின் தொகை 238 ஆல் அதிகரித்தது. அதாவது இரண்டரை வீதத்தினால் அதிகரித்தது. அதே காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த பெரும்பான்மையினத்தவரின் தொகை 875 ஆல் அதிகரித்தது. இது ஏறத்தாள ஒன்பது வீதம் ஆகும்.
வட-கிழக்கு இணைப்பினைப் பற்றி நாங்கள் பேசி வருகின்றோம். தந்தை செல்வநாயகம் அவர்கள் பிரதமருடன் 67ஆம் ஆண்டு பிரதமர் பண்டாரநாயக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். வடக்கு ஒரு பிராந்தியமாக இருக்கும் என்றும் கிழக்கில் இரண்டு அதற்கு மேற்பட்ட பிராந்தியங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் திருகோணமலையும் மட்டக்களப்பும் ஒரு பிராந்தியம். பட்டிருப்புக்கு தொகுதிக்கு தென் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி ஒரு பிராந்தியமாகவும் சிங்கள மக்கள் அதிகவில் குடியேற்றப்பட்ட அம்பாறை பிரதேசம் இன்னுமொரு பிராந்தியமாகவும் இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.
அந்த ஒப்பந்தத்தில் மாகாண எல்லைகளுக்கு அப்பால் பிராந்தியங்கள் இணையலாம் என்ற மிக முக்கியமான விடயம் கூறப்பட்டுள்ளது. திருகோணமலையும் மட்டக்களப்பும் வடமாகாணத்துடன் இணைந்திருக்கலாம். முஸ்லிம் மக்கள் பெரும்பாலாகவுள்ள பிராந்தியமும் விரும்பினால் இணைந்து கொள்ளலாம்.
இதனடிப்படையிலேயே 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு பிராந்தியமாக அரசியல் அதிகாரம் பகிர்ந்து தரப்படுமென கூறப்பட்டது. அது உயர் நீதிமன்ற தீர்ப்பினால் தற்போது அற்றுப் போயிருக்கின்றது. அந்தத் தீர்ப்பினை ஒரு நியாயமான தீர்ப்பாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இணைப்பு ஏற்படுத்தப்பட்ட விதத்தில் தவறு இருப்பதாக கூறி வடக்கு, கிழக்கு துண்டிக்கப்பட்டது. நாங்கள் ஏன் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டில் ஒரு தனிப் பிராந்தியம் இருக்க வேண்டும் என்று கேட்கின்றோம் எனத் தெரிவித்தார்.