சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை கைது செய்ய வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கடந்த 20 மாதங்களில் மலிக் சமரவிக்ரம செய்த ஊழல், மோசடிகளை குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள திருடர்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு மாத்திரம் இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள திருடர்களுக்கும் சேர்த்தே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நான் பிரதமராக இருந்தால், அரசாங்கத்தில் உள்ள 6 பேரை கைது செய்வேன் என பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார்.
இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கோரினோம் ஆனால், அது நடைபெறவில்லை எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.