வீட்டுக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு இரவு வேளையில், வீட்டுக்கு சுற்றிலும் உள்ள வளவுக்குள் இருந்து கேட்கின்ற ஆள்அரவமும் காலடி ஓசைகளும் எப்படி நமது மனதில் இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்துமோ… அதுபோலவே, மத அடையாள அரசியலுக்கான ஊசலாட்டங்கள் இப்போது மனதில் நடுக்கத்தை உண்டுபண்ணுகின்றன.
நாட்டில் நிலைமாறுகால நீதி தொடர்பாக பேசப்பட்டு வருகின்ற சமகாலத்தில், உள்நாட்டு அரசியல் தளமும் மூவின மக்களின் நீண்டகால பிரச்சினைகளும் கட்டமைப்பு ரீதியான மாற்றம் ஒன்றுக்கு உள்ளாக்கப்படுகின்றதோ என்ற சந்தேகம் மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியிருக்கின்றது. அதாவது, நமது அரசியல் பரப்பானது இனம்சார்ந்த அடையாளத்தை விட்டு விலகி மதம் சார்ந்த அடையாளத்துடன் பயணிக்க எத்தனிக்கின்றதோ என்ற எண்ணமும், அதன் தொடர்விளைவாக இனப் பிரச்சினை என்பது மதம் சார்ந்த அடையாளத்துடன் இன்னுமொரு பரிணாமத்தை எடுத்துவிடுமோ என்ற உள்ளுணர்வும் மேலெழத் தொடங்கியுள்ளது.
பல தசாப்தங்களாக இலங்கையில் இயங்கிக் கொண்டிருந்த சிங்கள மேலாதிக்க சக்திகளின் செயற்பாடுகள், பௌத்த மத அடையாளத்துடன் உருவெடுத்து வருவதை கடந்த சில வருடங்களாக தெளிவாகவே அவதானிக்க முடிகின்றது. இனவாத அமைப்புக்கள் என்று நம்மால் கருதப்படுகின்ற சிங்கள ராவய, பொது பலசேனா மற்றும் சிங்ஹலே போன்றவை உண்மையிலேயே பௌத்தம் சார்ந்த அடையாளத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அரசியல் கலாசாரத்தை கொண்டுவருவதற்கே முயற்சிக்கின்றன என்பதை உன்னிப்பாக நோக்குவோரால் அறிந்து கொள்ள முடியும்
இலங்கைக்கு பிரவேசம்
இலங்கை மக்கள் அடிப்படையில் மதங்களை பிரதான அடையாளமாகக் கொண்டிருக்கின்ற போதும் இனம் சார்ந்த அடையாளத்தையே பெரிதும் வெளிப்படுத்துகின்றனர். இப் பின்னணியில், குறிப்பாக அரபு தேசங்கள் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் வியாபித்துள்ள மத அடையாள அரசியலை இலங்கையிலும் விதைப்பதற்கான விதைகள் நாற்றுமேடையில் போடப்பட்டுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய மதத்தை பாதுகாத்தல் அல்லது மத அடையாளத்துடனான அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்தல் என்ற தோரணையில் இந்தப் புதிய கலாசாரம் தோற்றம்பெறலாம் என்று அவதானிகள் எதிர்வுகூறுகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கும் நோக்குடன் ஒரு அமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், முஸ்லிம்களின் அரசியல் என்பது ‘இஸ்லாமிய அரசியலாக’ அல்லது ‘இஸ்லாமிய தலைமைத்துவத்துடன்’ பயணிக்க வேண்டுமென்று ஒரு சில செயற்பாட்டாளர்கள் சமூக வலைத்தளங்களிலும் அங்குமிங்கும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். பௌத்த அடையாள அரசியலை நிறுவுவதற்கான முயற்சிகள் எப்போதோ திரைமறைவில் ஆரம்பமாகிவிட்டது. இவ்வாறான மத அடிப்படையிலான பிரசாரங்கள் உருவாகும் பட்சத்தில் அவை சமகால அரசியலில் செல்வாக்குச் செலுத்துவனவாக மாறிவிடும் என்பதை இந்திய அனுபவத்தின் ஊடாக நாம் புரிந்து கொள்ள முடியும். அப்படி ஒரு நிலைமை ஏற்படுகின்றபோது, இந்து, இஸ்லாமிய மத அடையாளத்திற்கு எதிராக பௌத்த மத அடையாளத்தை கேடயமாக்குவதற்கு பேரினவாதம் ஒருபோதும் பின்னிற்காது. இது மிகவும் ஆபத்தான பின்விளைவுகளை கொண்டுவரும். தங்கள் தங்கள் மதங்களை மிகத் தீவிரமாக பின்பற்றுவோர் இக்கருத்தை மறுக்கலாம் ஆனால் பல்லின, பல மத, பல் கலாசார நாடொன்றில் அதுவே யதார்த்தமாக இருக்கும்.
மதம் என்பது, மனித குலத்தின் மிகப் பெரிய அடிப்படையாகும். நாகரிகம், நல்ல பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாசாரம் போன்ற இன்னபிற விடயங்களின் தோற்றுவாயாகவும் அது திகழ்கின்றது. உலகளாவிய கணக்கெடுப்புக்களின்படி 20 இற்கு மேற்பட்ட பிரதான மதங்களையும் இன்னும் பல உப மதப் பிரிவுகளையும் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி எந்த மதத்தின் ஊடாகவும் தம்மை அடையாளப்படுத்தாத 16 வீதமான மக்களும் நம்மைப்போல வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவினரும் அடிப்படை மதக் கொள்கைகளில் ஒருக்காலும் விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதில்லை. ஆனால் தாம் வாழ்கின்ற புறச்சூழலுக்கு ஏற்றவகையில் நெகிழ்ச்சிப் போக்குடன் வாழ்வதைக் காண்கின்றோம். எது எவ்வாறிருப்பினும், ஒரு தொகுதி மக்களை மிகக் குறுகிய காலத்திற்குள் கிளர்ந்தெழச் செய்யக் கூடிய வல்லமையை மதம் கொண்டிருக்கின்றது. மதத்தின் பெயரால் அல்லது மத அடையாளத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற போராட்டங்கள், யுத்தங்கள், இனமுறுகல்கள் எந்தளவுக்கு பாரதூரமானவை என்பதை நாமறிவோம்.
உலக அரசியல்
மத அடையாளத்தின் மீதான சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்கு மிக நல்ல உதாரணம் உலக முஸ்லிம்கள் மீது அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றுகின்றவர்கள் என்ற காரணத்திற்காக முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளாகும். அணுவாயுதத் தேடுதல் என்ற பெயரிலும், உரிமை மீறல்களை தண்டித்தல் என்ற தோரணையிலும், தீவிரவாதத்தை ஒழித்தல் என்ற பெயரிலும் அராபிய தேசங்களில் உலக நாட்டாமைகள் மேற்கொள்கின்ற இராணுவ நடவடிக்கைகளின் உண்மையான உள்நோக்கங்கள் வேறுவிதமானவை. அங்குள்ள மக்களின் மதம் சார்பான அரசியல் அடையாளத்தை, ஆட்சியை பலமிழக்கச் செய்து, பெருமளவு வளங்களை சூறையாடுவதே இதில் பிரதான இடம் வகிக்கின்றது.
ஆனால் அதற்காக, மத அடையாளத்தை நிலைநிறுத்தல் என்ற கோதாவில் தீவிர போக்குடன் செயற்படுகின்ற முஸ்லிம் அமைப்புக்கள், இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு உயிர்களை துவம்சம் செய்கின்ற ஆயுத இயக்கங்கள் எதையும் இங்கு சரி காண முடியாது. அவ்வாறே, ஆசியப் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக கடும்போக்கு பௌத்த, இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொள்கின்ற மதத்தை முன்னிலைப்படுத்துகின்ற அடையாள அரசியலையும் வரவேற்க முடியாது.
எல்லா மதங்களும் நல்ல பண்புகளையே தமது வழிபாட்டாளர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றன. பௌத்தம், இந்துத்துவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவை ஏனைய மதங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையையும், பிறமத சகிப்புத்தன்மையையும் வலியுறுத்துகின்றன. ஆனால், பொதுவாக ஒவ்வொரு மதத்திலும் ஒரு குழுவினர் தீவிர மத அடையாளத்தை முன்னிறுத்த முயற்சிக்கின்றனர். இதனை அரசியலிலும் திணிக்கின்றனர். இதுதான் ஆசிய நாடுகளில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையாகும். இவ்வளவு காலமும் இன, மொழி அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு வழிநடாத்தப்பட்ட உரிமைசார் கோஷங்கள் இனிவரும் காலங்களில் மதக் கொந்தளிப்பின் வழியாக அல்லது மத அடையாளத்தை கொண்ட அரசியலின் ஊடாக முன்னகர்த்தப்படலாம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
அடிப்படை விளக்கம்
மத அடையாளத்தை பிரதானமாகக் கொண்ட பிரசாரம் அல்லது மத அடையாள அரசியல் என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய மதத்தை பின்பற்றுவதற்கு உரிமையுள்ளது. அது அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு அவசியமானதும் ஆகும். ஆனால், தமது இருப்பை, உரிமைகளை, அபிலாஷைகளை பெற்றுக் கொள்வதற்கான, அரசியல் இலாபங்களை தேடுவதற்கான ஒரு கருவியாக ‘மத அடையாளத்தை ‘அளவுக்கதிமாக தூக்கிப்பிடிப்பதையே இக்கட்டுiயில் உள்ள மத அடையாள அரசியல் எனும் பதம் குறித்து நிற்கின்றது. எனவே, இவ்விடயத்தை தெளிவாக உற்றுநோக்குவது அவசியம்.
ஆசியக் கண்டத்தின் நடப்பு விவகாரங்களை நோக்கினால் மத அடையாள தலைமைத்துவம், மத அடையாள அரசியலின் விளைவுகள், பின்விளைவுகளை நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். மியன்மார், மலேசியா, பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளிலான அண்மைக்கால அரசியல், சமூக சூழல்களும் அங்கு ஏற்பட்ட இன, மத முரண்பாடுகளும் உள்நாட்டுக் குழப்பங்களும் மத அடையாளத்தை முன்னிலைப்படுத்திய அரசியலால் ஏற்பட்ட விளைவுகள் என்பதை நிரூபிக்க வேண்டியதில்லை.
மியன்மாரில் பௌத்த துறவிகள் சிலரால் உருவாக்கப்பட்ட மத ரீதியான பாகுபாடுகள் பின்னர் அந்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்துவனவாக மாறியதற்கும், இஸ்லாமியர்களை பலியெடுத்ததற்கும் உலகமே சாட்சி.
அவ்வாறான ஒரு வேலைத்திட்டமே இந்திய துணைக்கண்டத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்களும் விமர்சகர்களும் கூறுகின்றனர். இந்திய வட மாநிலத்தில் தொடங்கிய மத அடையாள அரசியலானது ஒவ்வொரு மாநிலமாக பரவியிருக்கின்றது. பல அமைப்புக்கள் இந்த போக்கிற்கு திரைமறைவில் பக்கபலமாக செயற்படுகின்றன என்றால் மிகையில்லை.
இந்நிலையிலேயே கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் சிவசேனா என்ற ஒரு அமைப்பு உருவாகியிருக்கின்றது. இந்துக்களை பாதுகாத்து அவர்களுக்கு உரிய இடத்தை உறுதிப்படுத்தும் உயரிய நோக்குடனேயே இது நிறுவப்பட்டுள்ளது. இந்து மதத்தை பாதுகாப்பதும் அம்மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் முக்கியமானது. அம்மதத்தை பின்பற்றுபவர்கள் நிறைவேற்ற வேண்டிய உயிரிலும் மேலான பணியாக இது காணப்படுகின்றது. அது வேறு விடயம். ஆனால், பிராந்திய அரசியல் போக்குகளை வைத்துப் பார்க்கின்ற போது பிற மதத்தவரிடையே மட்டுமன்றி பொதுவான பார்வையுள்ள தமிழ் மக்களிடையேயும் ஒருவித சந்தேகம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்திய ஆளும்கட்சி, இலங்கையில் மத விடயங்களுக்குள்ளும் ஊடுருவி அடையாள அரசியலை தமிழர்களுக்குள் வளர்ப்பதற்கு முயற்சிக்கின்றதா என்பதுதான் அந்த சந்தேகமாகும். ஆனால் இலங்கையின் சிவசேனா இப்போதைக்கு அவ்வாறான ஒரு அமைப்பாக செயற்படாது என்றே பெருமளவான மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இதேவேளை பௌத்த, இஸ்லாமிய அடையாள அரசியல் உருவாகுவதற்கான சாத்தியங்களும் இல்லாமலில்லை. இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு உரிய நாடென்று சொல்லப்படுகின்றது. உத்தேச அரசியலமைப்பில் ‘சகல மதங்களுக்கும் சமத்துவம்’ என்று குறிப்பிடாமல் ‘பௌத்தத்திற்கு முன்னுரிமை’ என்ற வாசகத்தை உள்ளடக்குவதற்கு பௌத்த கடும்போக்காளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இலங்கையில் தற்போது நன்றாக வயிறுபுடைக்க வளர்ந்திருக்கின்ற இனவாதம், எந்தவொரு நேரத்திலும் மதவாதமாக மாறலாம். அந்த மதவாதம் பௌத்த அடையாள அரசியல் ஒன்றை கட்டமைப்பதற்கான எல்லா கைங்கரியங்களையும் செய்யும் என்பதை இங்கு மறந்து விடக் கூடாது.
முஸ்லிம்கள் தங்களது அரசியல்வாதிகளில் பெரும்பாலும் நம்பிக்கையிழந்துள்ள இன்றைய காலப்பகுதியில் ஒரு சில அரசியல் செயற்பாட்டாளர்கள் இஸ்லாமிய தலைமைத்துவம் இலங்கையில் உருவாக வேண்டுமென்று கருத்துக்களை அங்காங்கே முன்வைத்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. உள்நாட்டில் ஏனைய இனங்களுக்குள் இருந்து, மத அடையாள அரசியல் வெளிப்பட்டால் முஸ்லிம்களும் அவ்வாறான ஒரு அரசியலை சிருஷ்டிக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது. இந்துக்கள், பௌத்தர்கள் தத்தமது மதம்சார்ந்த அடையாள அரசியலை கையிலெடுக்கின்ற போது இஸ்லாமிய அடையாள அரசியலை முஸ்லிம்கள் தூக்கிப் பிடிக்கமாட்டார்கள் என்று யாராலும் கூற முடியாது. கடந்த 20 வருடங்களாக முஸ்லிம்களுக்குள் உருவாகியிருக்கின்ற ஏகப்பட்ட மத அமைப்புக்களும் உதவி வழங்குனோரும் இதற்கான ஆசீர்வாதத்தை வழங்கமாட்டார்கள் என்று மறுக்கவும் இயலாது.
புதிய பரிமாணம்
ஆக மொத்தத்தில், இவ்வளவு காலமாக ஒரு இன ரீதியான கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்ட இலங்கை விவகாரம் இனிவரும் காலங்களில் ஒரு மத ரீதியான அடையாளத்துடன் பார்க்கப்படும் அபாயம் இருக்கின்றது. இது மிக இலகுவாக அரசியல்மயமாக்கப்படும் என்பதால் மத அடையாளத்துடனான அரசியல் கலாசாரம் உருவாகலாம்; என்று கூறப்படுகின்றது. இன்று சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படையிலோ அல்லது பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற அடிப்படையிலோ பாகுபாடுகள் இருக்கின்றன. ஆனால் மத அடையாள அரசியல் உருவானால் பிளவுகள் மேலும் அதிகரிக்கும். பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று மத ரீதியான கோஷங்கள் முன்னிலைப்படுத்தப்படும். அதுமட்டுமன்றி, பௌத்தர்களுக்குள் இருக்கின்ற வௌ;வேறு தெய்வ வழிபாடுகளும் தனித்தனி உப பிரிவுகளாக உடையலாம். தமிழர்கள் என்ற பொதுப்படையாக அழைக்கப்படுகின்ற மக்கள் பிரிவிற்குள் உள்ளடங்கும் வைணவர்களும், தமிழ் கிறிஸ்தவர்களும், தத்தமது மத அடையாயத்தை கையிலெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.
வேறு இனங்களுக்குள் கலந்திருக்கின்ற கத்தோலிக்க, கிறிஸ்தவர்கள் தனியொரு மதமாக அடையாளம் காட்ட வேண்டுமென நினைப்பார்கள். இஸ்லாமியர்களுக்குள் இருக்கின்ற மதக் கொள்கை முரண்பாடுகளும் ஷீயா போன்ற மாற்றுக் கருத்தியலும், தற்போதைய முஸ்லிம் அரசியலை முரண்பாடுகள் நிறைந்த மத அடையாள அரசியலாக மாற்றியமைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது இனத்தை, மொழியை, சாதியை வைத்து அரசியல் செய்வோர் மதத்தை வைத்து பிழைப்பு நடாத்த வேண்டியேற்படும். இல்லாவிட்டால் அவர்கள் தோற்றுப் போக நேரிடும். பரஸ்பரம் எல்லா மதங்களின் அரசியலையும் வளர்ப்பதற்கு அம் மதங்களுடன் தொடர்புபட்ட வெளிநாடுகள் பின்னால் நின்று செயற்படும்.
இவ் விடயம் மிகவும் பாரதூரமானது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் நாம் எல்லோரும் வாழ்வது பல்லின, மத பன்மைத்துவம் கொண்ட, சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டிலேயே என்ற அடிப்படை யதார்த்தத்தை மனதில் வைத்து செயற்பட வேண்டியிருக்கின்றது. இஸ்லாமியர்கள் 99 வீதமாக வாழ்கின்ற ஒரு நாட்டிற்குள்ளேயே வெளிநாட்டு சக்திகள் உள்நுழைந்து, ஆட்சியை கவிழ்த்து, அந்நாட்டு மக்களையும் அழிக்க முடியுமென்றால்…. பல மதங்களை பின்பற்றும் மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் மத அடையாள அரசியலை சந்தைப்படுத்துவதும் மதக் குழுமங்களுக்கு இடையில் மென்மேலும் முரண்பாடுகளுக்கு தூபமிட்டு, நாட்டை சுடுகாடாக்குவதும் எந்தளவுக்கு சுலபமானது என்பதை சொல்லத் தேவையில்லை.
எனவே, இலங்கை போன்ற ஒரு பன்மைத்துவ மக்கள் பிரிவினரைக் கொண்ட ஒரு நாட்டுக்கு மத அடையாள அரசியல் கொஞ்சம் கூட பொருத்தமானதல்ல. பௌத்த தலைமைத்துவம், இந்துத் தலைமைத்துவம், இஸ்லாமிய தலைமைத்துவம் என்பனவெல்லாம் மதம்சார்ந்த தலைமைத்துவங்களாக இருக்கலாம்.
மதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நல்ல தலைமைத்துவ பண்புகள் அச் சமூகத்தின் அரசியல் தலைமைகளிடம் இருக்க வேண்டும். அதைவிடுத்து, அரசியல் தலைமைகள் மதம்சார்ந்த அடையாளத்தை கொண்டிருக்க முடியாது. இலங்கையில் மத அடையாள அரசியல் கலாசாரம் தோற்றம் பெறுமாக இருந்தால், காலஓட்டத்தில் தெற்கில் பௌத்தர்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் முரண்பட நேரிடலாம். வடக்கு கிழக்கில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் மதத்தை முன்னிறுத்தி முரண்பட்டுக் கொள்வார்கள். இந்துத்துவ அரசியல் அடையாளம் உருவானால் அதை பௌத்த அரசியல் அடையாளமும் சில வேளை இஸ்லாமிய அடையாள அரசியலும் அடக்க நினைக்கலாம். ஆனால் முஸ்லிம் அடையாள அரசியல் உருவானால் அதை பயங்கரவாதம் என்பார்கள், தீவிரவாதம் என்பார்கள். மேற்குலகமே அதனை அடக்குவதற்கு களத்தில் இறங்கும். இதுதான் உலகளாவிய அனுபவம் என்பதை மறந்துவிடக் கூடாது.
மத ரீதியான கொள்கைகளை விதைக்கின்ற அமைப்புக்கள், தற்போதிருக்கின்ற அரசியல்வாதிகளை, தலைவர்களை தமது மதத்தின் உயரிய பண்புள்ளவர்களாக உருவாக்குவதற்கு தவறிவிட்டன என்பது கவனிப்பிற்குரியது. எனவே, தங்களுடைய மதத்தை, அதனது இலட்சணங்களை அரசியலுக்குள் கொண்டு வரவேண்டுமென்று நினைக்கின்ற சக்திகள், அந்த எண்ணத்தை நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் தலைமைகளுக்கு மதச்சார்பற்ற பொதுவான அழுத்தங்களை கொடுக்கலாம். ஒரு அரசியல்வாதி, தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று மதங்கள் எவ்வாறு வரையறை செய்கின்றதோ அந்த வழியில் தங்களது தலைமைகளை, ஆட்சியாளர்களை வழிப்படுத்த முயற்சி செய்யலாம். அதைவிடுத்து மத அடையாளத்தை தீவிரமாக தூக்கிப் பிடிப்பதன் மூலம் இன்னுமொரு பிரளயத்திற்கு வித்திடுவது இனநல்லிணக்கத்திற்கு ஏதுவானதல்ல.
எல்லோருக்கும் அவரவரின் – மதத்தை பிடிக்க வேண்டும். மாறாக, மதம் பிடித்துவிடக் கூடாது.
ஏ.எல்.நிப்றாஸ்
(வீரகேசரி 23.10.2016)