வட-கிழக்கு இணைப்பில் சமூகக்கட்சி என்று கூறுவோர் மதில்மேல் பூனையாக இருக்கின்றனர் : றிசாத்

சுஐப் எம்.காசிம்   

 

 வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் சமூகக்கட்சி எனக் கூறுவோர் மௌனமாக இருந்து, அந்த இரண்டு மாகாணங்களையும் இணைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுப்போருக்கு பலம் சேர்ப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

றிசாத் பதியுதீன் பவுண்டேஷனின் அனுசரணையில், கிண்ணியா மத்திய கல்லூரியில் இன்று (22/10/2016) இடம்பெற்ற கல்விச் சாதனையாளர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார்.

டாக்டர். ஹில்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றியபோது கூறியதாவது,

வடக்கும், கிழக்கும் தொடர்ந்தும் பிரிந்துதான் இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் வடக்கில் பிறந்த நானும், எனது தலைமையிலான மக்கள் காங்கிரஸும் மிகமிகத் தெளிவாக இருக்கின்றது. பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும், பொதுமக்கள் மத்தியிலும் இதனை நாங்கள் அச்சமின்றிக் கூறிவருகின்றோம். 

rishad

மேற்குலக நாடுகளிலிருந்தும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு வரும் இராஜதந்திரிகளிடம் நாங்கள் இதனை உரத்துக் கூறியுள்ளோம். எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்தவரை திருப்திப்படுத்தி, நமது சமூகத்தைக் கஷ்டத்தில் போடுவதற்கு நாங்கள் துணை போகமாட்டோம்.

அரசியலுக்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி வாக்குக் கேட்பவர்கள் நாங்கள் அல்ல. தேர்தல் காலத்தில் மட்டும் மார்க்கத்தை முன்னிறுத்தாமல் எந்தக் காலத்திலும் இஸ்லாமிய வாழ்க்கை முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

பெருமானார் (ஸல்) அவர்கள் எமது சமூகத்தின் மீது கொண்டிருந்த பாசத்தினாலும், நேசத்தினாலுமே இஸ்லாமிய மார்க்கம் இவ்வளவு வேகமாகப் பரவியது. உலகமெலாம் இஸ்லாம் விரவியதற்கு அண்ணல் நபியின் தியாகமும், அவர் சமூகத்தின் மீதுகொண்ட கவலையுமே காரணம்.

14825703_663736227125759_1386224518_n_fotor

உமர் (ரலி) போன்ற உத்தம சஹாபாக்களின் இஸ்லாமிய ஆட்சி நமக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். அத்துடன், அரசியல் நடத்துவோருக்கு அது ஒரு பாடமாகவும் இருக்கின்றது என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களும் உரையாற்றினார்.