ரீட்டாவின் வருகையும் முஸ்லிம்களின் வேண்டுதலும்

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அசமந்தப் போக்கு முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதில் தவறிழைத்திருக்கின்றது. முஸ்லிம்களை, என்னவென்று தெரியாத ஓர் அரசியல் வெறுமைக்குள் அரசியல்வாதிகள் கைவிட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலைச் சற்றுக் காலம்தாழ்த்தியேனும் புரிந்துகொண்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் முஸ்லிம்களின் அபிலாஷைகளை முன்வைத்து, உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பூர்வாங்க வேலைகளைத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், ‘எங்களுக்கும் மக்களில் அக்கறை இருக்கின்றது’ என்பதைக் காண்பிக்க, முஸ்லிம் தலைவர்களும் தங்களது அக்கறையை அவ்வப்போது வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர்.  

7m8a7971-01_fotor

இலங்கையில் ஆயுத மோதல் இடம்பெற்ற காலத்திலும் அதற்கு முன்-பின்னான காலத்திலும் இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் பட்ட துயரங்களும் சந்தித்த இழப்புக்களும் சொல்லிமாளாது. தமிழர்கள் ஒரு நோக்கத்துக்காகப் போராடி, இழப்புக்களுக்கு முகம் கொடுத்தார்கள் என்றாலும் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் எந்தவித கோரிக்கையையும் வைக்காமல், போர்க்களத்தின் நடுவில் மாட்டிக் கொண்ட சமூகமாக இருபுறமும் தாக்கப்பட்டனர். ஆயுத மோதல் முடிவுக்கு வந்த பிற்பாடு, யுத்தகாலத்தில் ஏற்பட்ட இழப்புக்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு பற்றியெல்லாம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற கடந்த ஆறு வருடங்களில் முஸ்லிம்களின் இழப்புக்கள், எண்ணங்கள், உரிமைக் கோரிக்கைகள், பிரச்சினைகள் சரியான முறையில் சர்வதேச மயப்படுத்தப்படவில்லை.  

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பொறுப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜம்மியத்துல் உலமா சபை போன்ற சமயம்சார் அமைப்புகள், சிவில் சமூகம் என எல்லாத் தரப்பினரும் இதுவிடயத்தில் பாரிய வரலாற்றுத் தவறை விட்டிருக்கின்றார்கள். சர்வதேசம் கண்டுகொள்ளவில்லை; அரசாங்கம் முஸ்லிம்களைக் கணக்கெடுப்பதில்லை என்று சொல்கின்ற முஸ்லிம்கள், தம்பக்கம் இருக்கின்ற பிற்போக்குத்தனங்களை நிவர்த்திக்க முயற்சி எடுக்கவில்லை.  

ஒரு சோடாப் போத்தலைத் திறக்கின்ற போது வருகின்ற வாயு அழுத்தம் மாதிரி, சற்று நேரத்தில் அடங்கிவிடுகின்ற உணர்ச்சி அரசியலுக்குள்ளேயே மேற்சொன்ன முஸ்லிம் தரப்பினர் எல்லோரும் கட்டுண்டு கிடக்கின்றனர். ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடேயி, இலங்கைக்கு வந்த போது இந்நிலைமையில் நல்லதொரு மாற்றத்தை அவதானிக்க முடிந்தது.  

கடந்த காலங்களில் ஐ.நா மற்றும் சர்வதேச அமையங்களின் உயர் அதிகாரிகள் பலர் இலங்கைக்கு வந்து சென்ற போது, அநேக சந்தர்ப்பங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகளோ சிவில் சமூகமோ அவர்களைச் சந்தித்துத் தமது சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைக்கவில்லை. அவ்வப்போது சில மேலோட்டமான சந்திப்புக்கள் இடம்பெற்றாலும் ஆவண ரீதியாக முஸ்லிம்களின் பிரச்சினைகள் முன்வைக்கப்படவில்லை. தனது கட்சித் தலைவரின் ஆசிர்வாதமின்றி விரிவான ஆவணம் ஒன்றைச் சமர்ப்பித்த ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர், அதே கட்சியைச் சேர்ந்தவர்களால் அப்போதைய அரசாங்கத்திடம் காட்டிக் கொடுக்கப்படுமளவுக்கே நிலைமைகள் இருந்தன.  

நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெற்ற பின்னரும் பல ஐ.நா பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து போனார்கள். ஆனால், முஸ்லிம் தலைவர்களைச் சந்திப்பதோ முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்துக் கண்டறிவதோ அவ் அதிகாரிகளின் நிகழ்ச்சி நிரலில் இருக்கவில்லை. இதுபற்றிக் கேட்கும்போது, “நிகழ்ச்சி நிரல் ஏற்கெனவே இற்றைப்படுத்தப்பட்டு விட்டது; கடைசி நேரத்தில் நேரமொதுக்கித் தருமாறு கேட்டதாலேயே அது சாத்தியப்படவில்லை” என்று காரணம் கூறப்படும். ஆனபோதும், ஐ.நா விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடேயி இம்முறை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, பலதரப்பட்ட வழிகளிலும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றமை சற்று ஆறுதலளிப்பதாக இருக்கின்றது. இதற்கு நேரமொதுக்கிக் கொடுத்த ஐ.நா அலுவலகமும் நன்றிக்குரியது.  

குறிப்பாக, முஸ்லிம் அரசியல்வாதிகளின் இயலாமையைப் புரிந்துகொண்ட சிவில் அமைப்புக்களின் அண்மைக்கால செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை. அதிலும் குறிப்பாக ஆர்.ஆர்.ரி எனப்படும் ‘விரைவான பிரதிபலிப்புக் குழு’வானது சிவில் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்திச் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இக்குழு, பல்வேறு முக்கிய பிரச்சினைகளை ரீட்டா ஐசக்கின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கின்றது. தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் உள்ளடங்கலாக முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயமிழைப்புக்களை ரீட்டாவுக்கு சொல்லியிருக்கின்றது. உத்தேச அரசியலமைப்பில் சிறுபான்மை முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமெனவும் எல்லை மீள் நிர்ணயத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்படாது காக்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களின் காணி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறு வேண்டியுள்ளது. இன்னும் பல விடயங்களை ஆதாரபூர்வமாக ஐ.நாவின் கவனத்துக்கு ஆர்.ஆர்.ரி கொண்டு வந்திருக்கின்றது.  

இவ்வமைப்பு மாத்திரமன்றி, வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளர் மௌலவி பி.ஏ.எஸ். சுபியானும் ரீட்டா ஐசக்கைச் சந்தித்துத் தமது வேண்டுதல்களை முன்வைத்திருக்கின்றார். புலிகளால் ஆயுத முனையில் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையே மிகப் பெரிய இனச் சுத்திகரிப்பு என்ற போதும், 26 வருடங்களாக அவர்கள் இன்னும் தமது சொந்த மண்ணுக்குத் திரும்பவில்லை. இருப்பினும், உலகம் இம் மக்களைக் கண்டுகொள்ளவில்லை. என்று நிலைமையை விளக்கியிருப்பதுடன் மூன்று முக்கிய ஆவணங்களையும் கையளித்துள்ளார்.  

இவ்வாறு, வேறு பல முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் மக்களின் பிரச்சினையில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கின்றன. பல சிவில் அமைப்புக்களை உள்ளடக்கிய ‘தேசிய சூறா சபை’ இவ்வளவு காலமாகக் கொழும்பை மையமாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அண்மையில் அவ்வமைப்பின் தலைவர் தாரிக் மஹ்மூத் உட்பட முக்கிய உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் அமர்வுகளை நடத்தியிருக்கின்றனர். தேசிய ரீதியான கண்ணோட்டத்தோடு முஸ்லிம்களின் அரசியல், சமூக, மத, பொருளாதார, வாழ்வியல் என எல்லாப் பிரச்சினைகளையும் புள்ளிவிவர ரீதியாக ஆவணப்படுத்தி, அதற்காகச் சாத்வீகமான முறையில் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. அரசியல்வாதிகள் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கும் என்று அச்சபை உறுதிபடச் சொல்லியிருக்கின்றது.  

‘தேசிய சமத்துவப் பேரவை’ என்ற சிவில் அமைப்பு உத்தேச அரசியலமைப்பு வரைபில் கூடிய கவனம் செலுத்திச் செயற்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பானது முஸ்லிம்கள் பாரியளவில் உரிமைகளை இழப்பதற்கும் அவர்கள் மீதான அடக்குமுறைப் பிரயோகத்துக்கும் வழிவகுக்கும் என்று அவ்வமைப்பு கூறியுள்ளது. அதிகாரப் பகிர்வு விடயத்தில் பொலிஸ், நில அதிகாரங்களை வழங்குவது முஸ்லிம்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் குந்தகமானது என அது சுட்டிக் காட்டியுள்ளது. புதிய யாப்பின் ஊடாக முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்படக் கூடிய அபாயம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டுள்ள இப்பேரவை, நிலவுரிமை சமத்துவமின்மையை போக்குவதற்குப் புதிய யாப்பின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனக் கோரியுள்ளது. இவ்வாறு இன்னும் பல சிவில் அமைப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன.  

இவ்வளவு காலமும் அரசியல் தலைவர்கள் மீது இந்தச் சமூகம் தொடர்பான முழுப் பாரத்தையும் போட்டுவிட்டுத் தத்தமது தொழில்களில் ஈடுபட்டிருந்த சிவில் சமூக முக்கியஸ்தர்கள், “இந்த அரசியல்வாதிகள் சரிப்பட்டு வரமாட்டார்கள்” என்ற முடிவில், தாங்களாகவே செயற்பாட்டுத் தளத்துக்கு வந்துள்ளமை நல்லதொரு முன்மாதிரி எனலாம். சிவில் அமைப்புக்களும் முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்களும் “உங்களால், முடியாவிட்டால் வழியைவிடுங்கள்; நாங்கள் செய்கின்றோம்” என்று குரலெழுப்பிப் பேச எத்தனிக்கின்ற போது, மாற்று அரசியல் கட்சிகள் உருவாகின்ற போது, தலைவர்களின் தவறுகள் ஏதோ ஓர் அடிப்படையில் மக்கள் மயப்படுத்தப்படுகின்ற போது…. முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுறுசுறுப்பு அதிகமாவது போல் உணர முடிகின்றது.  

அந்த வகையில், ரீட்டா ஐசக் நாடேயியை இரு பிரதான முஸ்லிம் கட்சித் தலைவர்களும் சந்தித்து முஸ்லிம்களின் பிரச்சினைகள், கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ரீட்டாவுக்கும் இடையிலான சந்திப்பின் போது, சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொள்வதோடு, அதன்பொருட்டுச் சுயாதீன தேசிய ஆணைக்குழு அமைக்க வேண்டும் என ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் தமிழர்களின் காணிகளை இராணுவம் கையகப்படுத்தியிருப்பது போல கிழக்கில் முஸ்லிம்களின் காணிகளை இராணுவமும் முன்னர் விடுதலைப் புலிகளும் கையகப்படுத்தியிருக்கின்றனர் என்று ஹக்கீம் சொல்லியுள்ளார். இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் பிரச்சினைகள், காணிகளை மீளப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், இலங்கையில் பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எனப் பல விடயங்களை விரிவாகப் பேசியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், கோரிக்கைகளையும் கவனயீர்ப்புக்குரிய விடயங்களையும் எழுத்து வடிவிலும் சமர்ப்பித்திருக்கின்றார்.  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கும் ரீட்டாவுக்கும் இடையிலான சந்திப்பின் போது, அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல் தீர்விலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள், கோரிக்கைகள் உள்வாங்கப்படுவதுடன் அவர்கள் கடந்த காலத்தில் சந்தித்த கஷ்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வழிவகுக்குமாறும் ரிஷாட் அழுத்தமாகக் கோரியுள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமெனச் சொல்லும் சர்வதேசம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலோ, அபிலாஷைகள் பற்றியோ அக்கறை காட்டுவதில்லை என்றும் குறைப்பட்டுள்ளார். வடக்கையும் கிழக்கையும் இணைக்க எமது கட்சி ஒருபோதும் இடமளிக்காது என்ற விடயத்தை வெளிப்படையாகவே ரீட்டாவிடம் கூறியுள்ளார். வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, அவர்களது காணிகள் கபளீகரம் செய்யப்பட்டமை, கிழக்கில் காணிகள் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை, தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம், அளுத்கமை கலவரம், நுரைச்சோலைச் சுனாமி வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் உள்ள தடங்கல் பற்றிய விவரங்களை ரீட்டாவுக்கு முன்வைத்துள்ள ரிஷாட், இவ்வாறு முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை உள்ளடக்கியதாக ஐ.நா அறிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று ரீட்டாவிடம் கோரியுள்ளார்.   

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் ரீட்டா ஐசாக்கை சந்தித்தது வரவேற்கத்தக்க விடயம் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. அரசாங்கமும் சர்வதேசமும் எல்லா மக்களையும் சமமான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் பார்வைக் கோணங்கள் வேறுபடுகின்றன. தமிழர்களுக்கு வழங்குகின்ற தீர்வின் கனதியை குறைப்பதற்கான ஒரு கருவியாகவே முஸ்லிம்களின் பிரச்சினைகளை அரசாங்கம் கையாள்கின்றது; முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டாலும் முஸ்லிம்களை வேறு கண்கொண்டு பார்க்கும் போக்கு சர்வதேசத்திடம் இருப்பதைத் தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது. உலக அரசியல், இஸ்லாத்தைப் பின்பற்றுவோரை பிழையாகக் காட்டுகின்ற ‘இஸ்லாமோபோபியா’ எனும் சதித்திட்டம் போன்றன மட்டுமே இந்த மனோநிலைக்குக் காரணம் எனக் கூறிவிட முடியாது. இலங்கை முஸ்லிம்கள் இது விடயத்தில் பாரிய தவறை இழைத்திருக்கின்றனர்.  

தமிழர்களின் பிரச்சினைக்குப் பின்னால் இன்று சர்வதேச நாடுகள் நிற்கின்றன என்றால், இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கச் சொல்லி ஐ.நா சபையே அழுத்தம் கொடுக்கின்றது என்றால்…. அதுவெல்லாம் வெறுமனே வெற்றுக் கோஷங்களாலும் சர்வதேச அரசியல் போக்குகளாலும் இலகுவில் நடந்தவை அல்ல என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களும் அவர்களது அரசியல் தலைவர்களும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இதற்காகப் பாடுபட்டிருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்துக்கு அப்பால், ஜனநாயக வழிமுறைகள் ஊடாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அழிவுகள், இழப்புக்கள், கோரிக்கைகள் எல்லாவற்றையும் யாரும் மறுதலிக்க முடியாதவாறு உலகின் கண்முன்னே வைத்திருக்கின்றார்கள். அதன் காரணமாகவே, தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென சர்வதேசம் முன்னிற்கின்றது.  

இதேபோன்றதொரு செயன்முறைமை முஸ்லிம்கள் விடயத்திலும் அவசியமாகின்றது. எனவே, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகளிடமிருந்து இந்தச் சமூகம் இன்னும் நிறையவே எதிர்பார்க்கின்றது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றாவிட்டால், முதலில் ‘இந்த அரசியல்வாதிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்’ என்று முஸ்லிம்கள் சர்வதேசத்திடம் கேட்க வேண்டியிருக்கும்.

 

மொஹமட் பாதுஷா – 

நன்றி – TM