இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலககோரி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் இஸ்லாமாபாத்தில் பாராளுமன்றம் முன்பு தொடர் போராட்டம் நடத்தினார். பாகிஸ்தான் கவாமி தெக்ரிக் கட்சி தலைவர் தகிருல் காத்ரியும் இம்ரான்கானுடன் இணைந்து போராட்டம் நடத்தினார்.

அப்போது, இந்த இரு கட்சிகளையும் சேர்ந்த கட்சி தொண்டர்கள் 500 பேர் பாகிஸ்தானின் அரசு டி.வி.யான ‘பி.டி.வி’ டெலிவி‌ஷன் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி சூறையாடினர்.

Imran Khan

அங்கு ஒளிபரப்பை தடுத்து நிறுத்தினர். இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராணுவம் அங்கு விரைந்து சென்று கலவரக்காரர்களை அடித்து வெளியேற்றியது.

இது குறித்த வழக்கு இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கவுசர் அப்பாஸ் ஹைதி ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அதில், பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் , பாகிஸ்தான் அவாமி கட்சி தலைவர் தஹிருல் காத்ரி மற்றும் டி.வி நிலையத்தில் தாக்குதல் நடத்திய 68 பேரையும் போலீசார் கைது செய்ய வேண்டும்.

அவர்களை வருகிற நவம்பர் 17-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.