ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 என்ற மலிவு கட்டணத்தில் சராசரி மக்களும் பயணம் செய்யும் விமான சேவை ஜனவரி மாதம் அமலுக்கு வருகிறது.
பிராந்திய அளவில் இரண்டாவது நிலை நகரங்களையும், மூன்றாவது நிலை நகரங்களையும் விமான போக்குவரத்தின்மூலம் இணைக்கவும், சராசரி இந்திய மக்களும் விமானத்தில் பயணம் செய்யவும் வகைசெய்து மத்திய அரசு ‘உடன்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜூ செய்தியார்களிடம் பேசுகையில், ‘‘சராசரி இந்திய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலான இந்த திட்டத்தை மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன், நம்பிக்கையுடன் வடிவமைத்து இருக்கிறோம். இந்த திட்டத்தின்கீழ் முதல் விமானம், 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது பயணத்தை தொடங்கும்’ என்றார்.
தற்போது பயன்பாட்டில் இருக்கிற விமான நிலையங்களும், பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களும் இணைக்கப்படும். நான்கு வருடங்களில் பயன்பாட்டில் இல்லாத 50 விமான நிலையங்களில் ரூ. 4 ஆயிரம் கோடி அளவில் சீரமைப்பு பணிகள் செய்யப்படும். ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மற்றும் ஜெய்சால்மீர் விமான நிலையங்கள், குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் மற்றும் ஜாம்நகர் விமான நிலையங்கள், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா மற்றும் பதன்கோட் விமானநிலையங்கள் மற்றும் உத்தரபிரதேச மாநில அலகாபாத் விமான நிலையம் மற்றும் அசாம் மாநில லாகிம்பூர் மற்றும் ஜோர்காட் விமான நிலையங்களை உடன் திட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பங்கேற்கிற விமான நிறுவனங்களின் விமானங்களில் பாதி இருக்கைகள் 476 கி.மீ. முதல் 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கானவை. அதாவது ஒரு மணி நேர பயணத்துக்கு உரியவை. விமான கட்டணம் ரூ.2,500 ஆகும். மீதியை சந்தை அடிப்படையில் நிர்ணயித்துக்கொள்ளலாம். நல்ல லாபம் தருகிற தடங்களில் விமான கட்டணத்துக்கு வரி விதிக்கப்படும். இதன்மூலம் பயணிகள் கட்டணம் கூடும். பிராந்திய இணைப்பு திட்டத்தின்கீழ் விமானங்களில் கட்டணம் ரூ.1,420 முதல் ரூ.3,500 வரையில் இருக்கும்.
ஹெலிகாப்டர்களில் 30 நிமிட பயண கட்டணம் ரூ.2,500 ஆக இருக்கும். பிராந்திய இணைப்பு திட்டத்தின்கீழ் வாரத்துக்கு 3 முதல் 7 பயண சேவைகள் வரை இருக்கும்.
இந்த திட்டம் பற்றி சிவில் விமானத்துறை ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்கா கூறுகையில், ‘‘இப்படி ஒரு திட்டத்தை அமல்படுத்துவது உலகிலேயே இதுவே முதல் முறை. வேறு எங்கும் செயல்படுத்தாத திட்டத்தை இங்கே செயல்படுத்துகிறோம்’’ என குறிப்பிட்டார்.