சின்னபிள்ளைத் தனமான செயல்களினால் அரசுக்கு பாதிப்பு : ஜனாதிபதி கவலை

file image

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தோட்டத்தை சுற்றிவளைத்து சோதனையிட்டமை முறையற்ற செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டினை மறைத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இவ்வாறான சின்னபிள்ளைத் தனமான செயல்களினால் முழு அரசாங்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். யார் என்ன கூறினாலும் இது ஒரு குழந்தைத்தனமான செயல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக யாராவது தகவல் வழங்கினால் இவ்வாறான குழந்தைத்தனமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் அவற்றினை கண்டுபிடிப்பதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் உள்ளன. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தில் இதற்கான உபகரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாட்டினை குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்டதா? அல்லது நிதி மோசடி விசாரணை பிரிவு மேற்கொண்டதா? என்பது குறித்து தனக்கு தெரியாதென்ற போதிலும் இதனால் பொலிஸார் சேறு பூசிக் கொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இறுதியில் இவ்வாறான செயற்பாடுகள் மக்களின் நகைப்புகுரியதாக மாறிவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.