இமாம்கள், அறிஞர் பெருமக்கள் எல்லாம் வறுமையில்தான் இல்மைத் தேடினார்கள் என்று ஆறுதல் கூறினார்கள்

என் வாழ்வில் மறக்க முடியாத மகத்தான ஆசான் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் : மெளலவி ஸஹ்றான் பின் ஹாஷிம் (மஸ்ஊதீ)

 

 1998ம் ஆண்டு நான் ஜாமிஅதுல் பலாஹ் அரபிக் கல்லூரியில் அல்குர்ஆன் மனன பீடத்தில் சேர்ந்து, சுமார் மூன்று வருடத்திற்குள் அல்லாஹ்வின் வேதத்தை முழுமையாக மனனமிட்டு முடித்த பின் கிதாபுப் பிரிவிற்குள் காலடி எடுத்து வைத்தேன். கிதாபுப் பிரிவில் நான் முதலாம் வகுப்பில் மார்க்கக் கல்வி கற்கும் போது எனது குடும்பம் கடுமையான வறுமையில் இருந்தது. இனப்பிரச்சனை கோலோச்சியிருந்த அக்கால கட்டத்தில் எனது தந்தையால் தமிழ் பிரதேசங்களுக்குச் சென்று போதியளவு சம்பாதிக்க முடியவில்லை. மத்ரஸாவில் சரியாக அணிந்து கொள்வதற்குக் கூட ஒழுங்கான ஜுப்பா இல்லாத காலமது. என்னிடமோ இரண்டே இரண்டு ஜுப்பாக்கள் தான் இருந்தன. அது கூட ஓரங்கள் ஒட்டுப் போட்ட ஜுப்பா. அதை அணிந்து சென்று கல்வி பயில பல தடவைகள் நான் சங்கடப்பட்டுள்ளேன். 

 

collage_fotor_fotor

 

 இவ்வாறான சூழ்நிலையில் ஒரு நாள் எனது உஸ்தாத் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் என்னை அழைத்து “என்னிடம் அரபிகள் அணியும் முழுமையான, புத்தம் புதிய ஜுப்பாக்கள் மூன்று உள்ளன. அவைகள் விலை உயர்ந்தவைகள். நான் அவற்றை உமக்குத் தருகிறேன். நீ அவற்றை வெட்டி உன் அளவிற்குத் தைத்துக் கொள்! தையல் கூலியையும் நானே தருகிறேன். இதனை மத்ரஸா பிள்ளைகள் யாரிடமும் சொல்லாதே!” என்று கூறி, விலை உயர்ந்த மூன்று முழுமையான ஜுப்பாக்களைத் தந்தார்கள். அந்த ஜுப்பாக்களை என்னிடம் தரும் போது “இமாம்கள், அறிஞர் பெருமக்கள் எல்லாம் வறுமையில்தான் இல்மைத் தேடினார்கள்” என்று ஆறுதல் வார்த்தைகளையும் கூறினார்கள். அந்நேரம் நான் நெகிழ்ந்து போனேன். 

நான் ஜாமிஆவில் கல்வி கற்கும் போது மத்ரஸாவின் மாதக் கட்டணம் 300 ரூபாய் ஆகும். குடும்ப வறுமையால் இத்தொகை அந்நேரம் எமக்குச் சுமையாக இருந்தது. இத்தொகையை உரிய திகதிக்குள் கட்டாத மாணவர்களை “பகல் உணவு வைக்கும் நேரம் பார்த்து” நிதிப் பொறுப்பாளர் வந்து “வீட்டிற்குச் சென்று சாப்பிடுங்கள்! உங்களுக்கு இன்று மத்ரஸாவில் உணவில்லை” என்று கடுமையாகச் சொல்லி மத்ரஸாவை விட்டு விரட்டி விடுவார். மதிய நேரத்தில் அவ்வாறு விரட்டப்படும் மாணவர்களில் பெரும்பாலும் நானும் இருப்பேன். வறுமையால் மத்ரஸா கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் எல்லாம் தத்தம் வீடுகளுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு வருவார்கள். என்னைப் பொருத்தமட்டில் அந்நேரம் வீட்டிற்குச் சென்றால் உணவிருக்காது என்பது எனக்குத் தெரியும். காரணம் எனது தந்தை ஒவ்வொரு கடை கடையாக வியாபாரம் செய்து விட்டு வீடு திரும்ப நண்பகல் மூன்று மணியாகும். அதன் பின்னரே எனது வீட்டில் தாய் சமைப்பார்கள். ஆதலால் மத்ரஸாவிலிருந்து வெளியேறி பகல் உணவு உண்ணாமல் பொது நூலகத்திற்குச் சென்று விட்டு வெறும் வயிற்றுடன் மத்ரஸா திரும்புவேன். 

இந்நிலையை அறிந்த அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் என்னை அழைத்து “கட்டணம் செலுத்தாத பிள்ளைகளை பொறுப்பாளர் விரட்டும் போது வெளியேறி விட்டு, யாருக்கும் தெரியாமல் பின் கதவால் உள்ளே நுழைந்து விடு! மத்ரஸா சமையல்காரரிடம் நான் சொல்லி உணவை வாங்கி வைக்கிறேன். உனது குடும்ப வறுமைக்காகவே இதனை நான் செய்கிறேன்” என்று சொல்வார்கள். சில பொழுதுகளில் என்னிடம் பணத்தைத் தந்து “நான் தந்ததாக புஹாரி மெளலவியிடம் சொல்லாமல் நீ ஹொஸ்டல் பீஸைக் கட்டி விடு” என்று சொல்லி பணம் கொடுப்பார்கள். 

நான் திருக்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழாகிய துவக்க காலத்தில் தெலியாகொன்ன எனும் ஊருக்கு தராவீஹ் தொழ வைப்பதற்காக என்னையும், எனது நண்பர் ஹிஸ்பான் ஹாபிழையும் அழைத்துக் கொன்டு அப்துல்லாஹ் ஹஸ்ரத் செய்த பிரயாணத்தில் அவரின் பல நற்குணங்களை நாம் கண்டோம். ஒரு தகப்பனைப் போன்று அவர் நடந்து கொள்ளும் கனிவையும் நாம் கண்டோம். எங்கள் இருவரையும் தெலியாகொன்னை ஜும்ஆப் பள்ளியில் விட்டு விட்டு ஹஸ்ரத் அவர்கள் கொழும்புக்குச் செல்லும் போது சொந்தப் பிள்ளைகளை விட்டுப் பிரியும் பாசமுள்ள ஒரு தந்தையை போல் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டதைக் கண்டு நான் கலங்கி நின்றேன். 

மத்ரஸா வாழ்வில் ஒவ்வொரு பிள்ளைகளையும் தனித்தனியாக அவதானிக்கும் சிறந்த ஆற்றல் அவர்களிடம் இருந்தது. தனக்கு அன்பளிப்பாகக் கிடைக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும் அதனை உடனே தர்மம் செய்து விடுவார்கள். மாணவர்களுடன் மத்ரஸாப் பாடங்களில் கடுமையாக அவர்கள் இருந்தாலும் தனிப்பட்ட வகையில் இழகிய மனம் படைத்தவர்கள். எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டுமென்பதில் அவர்கள் அதிக சிரத்தை எடுப்பார்கள். செல்வந்தர்களிடமோ, செல்வந்தர்களின் பிள்ளைகளிடமோ தனது கஷ்டங்களை முறையிட மாட்டார்கள். மார்க்க விடயங்களில் அவர்களுடன் எமக்கு முரண்பாடுகள் இருந்த போதிலும் அவர்களின் நற்குணத்தை இன்றைக்கும் எம்மால் மறக்க முடியவில்லை! 

நான் மத்ரஸாவில் நான்காம் ஆண்டு கல்வி பயிலும் போது தவ்ஹீத் சிந்தனையால் கவரப்பட்டு மத்ரஸாவிற்குள்ளேயே பிரச்சாரம் செய்யத் துவங்கியிருந்தேன். அந்நேரம் என்னை அழைத்த ஹஸ்ரத் அவர்கள் தனது அதிராம்பட்டின பரிபாஷையில் “இங்க வாஹா..! இப்னு தைமிய்யாவுடைய புத்தகங்களை எல்லாம் படிக்காதே! நாம ஷாபி மத்ஹப்” என்று சொன்னார்கள். நான் எதுவும் பேசவில்லை. பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் “இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்” எனும் நூலை நான் தனிமையில் வாசித்துக் கொண்டிருக்கும் போது என்னை நையப்புடைத்த ஹஸ்ரத் அவர்கள், அந்நூலை என்னிடமிருந்து எடுத்துச் சென்றார்கள். பின்னர் தனது அறைக்குச் சென்று அவர்கள் வாசித்திருக்க வேண்டுமென‌ நினைக்கிறேன். மறுநாள் என்னை அழைத்து “இமாம் இப்னு தைமிய்யாவை நான் வழிகேடர் என்று சொல்லவில்லை. அவரும் பெரிய அறிஞர்தான். அவரது நூலில் அவர் பல விடயங்களை ஆழமாக விளக்குகிறார். ஆனாலும் இப்போது இது உமக்குத் தேவையில்லை” என்றார்கள். 

அதே போன்று ஷாபி இமாம் அவர்களின் கவிதைத் தொகுப்பு என அழைக்கப்படும் “தீவானுல் இமாம் அஷ்ஷாபி” எனும் கவிதைத் தொகுப்பை நான் வாசித்துக் கொண்டிருக்கும் போது “எனக்கும் அதை வாசித்து தமிழாக்கம் செய்!” என்று அவர்கள் பணித்து அதை ஆர்வமாய் செவிமடுத்தது இன்றும் நினைவில் பசுமையாய் உள்ளது. 

நான் மத்ரஸாவில் ஆறாம் ஆண்டு கல்வி கற்கும் போது “மத்ரஸாவின் ஷாபி மத்ஹப் பாட விதானத்தை விமர்சித்தேன்” என்று காரணம் கூறி நிருவாகத்தில் உள்ள ஒரு சிலரின் கெடுபிடிகளால் நான் இடை நிறுத்தம் செய்யப்படும் போது அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் என்னை அழைத்து “நீ ஷரீஆவுடைய இல்மைக் கற்பதைக் கை விட்டு விடாதே! எங்காவது நீ விரும்பும் ஒரு தவ்ஹீத் மத்ரஸாவுக்குச் சென்று இல்மைக் கற்றுக் கொள்! இந்த மத்ரஸா ஷாபி மத்ஹப் மத்ரஸாதான்” என்று கூறி வழியனுப்பினார்கள். அவர்களைப் பிரிந்தாலும் அவர்களின் நற்குணங்கள் ஏற்படுத்திய நினைவுகள் நெஞ்சில் நீங்காத‌ இடத்தைப் பிடித்து விட்டன. 

ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் மரணித்த செய்தி கிடைத்த போது எனது நெஞ்சில் கனத்தை உணர்ந்தேன். 21.03.1932ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினத்தில் பிறந்த ஹஸ்ரத் அவர்கள் 13.10.1959ம் ஆண்டு நமதூருக்கு வருகை தந்தார்கள். இலங்கையில் முதலாவது அல்குர்ஆன் மனன “ஹிப்ழு” வகுப்பைத் துவங்கிய வரலாற்றுப் புகழும் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களையே சாரும். 

சுமார் 55 வருட காலமாக பெற்ற தாயை, சொந்த ஊரை, உற்றார் உறவினரைப் பிரிந்து கல்விப் பணியாற்றிய மகத்தான மனிதர் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள்தான்! ஹாபிழ்களையும், உலமாக்களையும் உருவாக்கும் பணியில் அவர்களின் அயராத முயற்சி அளப்பெரியது. காலத்தால் அழியாதது. மனைவி இறந்தும் மறுமணம் செய்து கொள்ளாமல் மத்ரஸா வாழ்விலேயே காலங்களைக் கழித்தார்கள். 

மார்க்கத்தை வைத்து பணம் சேர்க்க அவர்கள் நினைத்திருந்தால் கோடி கோடியாய் பணம் சம்பாதித்திருக்கலாம். அதையெல்லாம் அவர்கள் செய்யவில்லை. ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்களின் பல தசாப்த உழைப்பு இன்று நடாளாவிய ரீதியில் பல மார்க்க அறிஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. 

ஹஸ்ரத் அவர்களின் ஜனாஸாவைப் பார்க்கும் போது உள்ளம் உருகிப் போனதை நான் உணர்ந்தேன். கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டது. யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னிப்பாயாக! அறியாமல் அவர் செய்த மார்க்கப் பிழைகளைப் பொருத்தருள்வாயாக! நீயே சிறந்த மன்னிப்பாளன். கொடையாளி” எனப் பிரார்த்தித்துக் கொண்டு விடை பெற்றேன்.

 

மெளலவி ஸஹ்றான் பின் ஹாஷிம் (மஸ்ஊதீ)
அழைப்பாளர், தேசிய தவ்ஹீத் ஜமாஅத், காத்தான்குடி