அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் உலக நாடுகளுக்கு ஆபத்து : ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

டொனால்டு டிரம்ப் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக அவர் அதிரடியான கருத்துக்களை கூறுகிறார். இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கமி‌ஷனர் சையத்ராஷ் அல்உசைன், டொனால்டு டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

 

saith al husain

நான் ஐ.நா. அமைப்பின் ஒரு பிரதிநிதியாக இருக்கிறேன். நான் எந்த நாட்டு அரசியல் பற்றியும் பேசக்கூடாது. அதில் தலையிடவும் கூடாது. ஆனாலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்புக்கு எதிராக சில கருத்துக்களை வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளது.

டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறிய கருத்துக்கள் சர்வதேச அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நிலையில் இருந்தன. அதை அவர் திருத்திக்கொள்வார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் தொடர்ந்து அந்த கருத்துக்களை கூறுவதிலேயே நிலையாக உள்ளார். அவரிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை.

எனவே அவர் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அவர் மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என நான் கருதுகிறேன். அவருடைய கருத்துக்கள் படி பார்த்தால் அவரால் சர்வதேச உலகத்துக்கு பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும். குறிப்பாக முஸ்லிம், குடிபெயர்ந்தோர், மைனாரிட்டி மக்கள் போன்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

நான் மனித உரிமை அமைப்பின் தலைவன் என்ற முறையில் மனிதர்களுக்கு எந்த வகையில் ஆபத்து ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட எனக்கு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் தான் இதை நான் சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே டொனால்டு டிரம்ப் கூறிய கருத்துக்கள் தொடர்பாக சையத்ராஷ் அல்உசைன் கருத்து கூறியிருந்தார். அப்போது, சையத்ராஷ் அல்உசைனுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்தது. ஐ.நா. அமைப்பில் இருப்பவர் மற்ற நாட்டு அரசியல் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று ரஷியா கூறியிருந்தது. அதையும் மீறி இப்போது அவர் கருத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.