FCID மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு செயற்பாடு குறித்து ஜனாதிபதி அதிருப்தி

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்கும், ஜனாதிபதி மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் முறுகல் நிலை ஒன்றை ஏற்படுத்துவதற்கும் அந்த அமைச்சில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக புலனாய்வு பிரிவு ஜனாதிபதிக்கு, அறிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சாகல ரத்நாயக்க செயற்படுகின்றார்.

அமைச்சர் பௌசி போன்ற அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் தொடர்பிலும், முன்னாள் இராணுவ அதிகாரிகள் தொடர்பிலும், அந்த அமைச்சு செயற்பட்ட முறை தொடர்பில் ஜனாதிபதி சந்தேகம் கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு செயற்பாடு குறித்து ஜனாதிபதி கடுமையாக விமர்ச்சித்திருந்தார்.

நிதி மோசடி விசாரணை பிரிவு, குற்றப் புலனாய்வு பிரிவு அல்ல லஞ்ச ஊழல் ஆணைக்குழு உரிய முறையில் செயற்படவில்லை என்றால் தான் அது தொடர்பில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ள நேரிடும் என தான் பிரதமர் மற்றும் அமைச்சரவையில் தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.