மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மரணித்து ஒன்னரை தசாப்தங்கள் கழியப்போகின்றன.அவர் மிகவும் முனைப்புக் காட்டிய சமூகம் சார் விடயங்களில் ஒன்று தான் வடகிழக்கு இணைப்பு,பிரிப்பு தொடர்பான விடயத்திலாகும்.தற்போது அப் பிரச்சினை மீள உருவெடுத்துள்ளது.இதில் முஸ்லிம்கள் பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாக உள்ளனர்.சிலர் வடக்கு,கிழக்கை இணைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சிலர் இணைந்த வடக்கு,கிழக்கு மாகாணத்தினுள் ஒரு முஸ்லிம் அலகை உருவாக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.இதன் போது எழுகின்ற ஒவ்வொரு சச்சரவுகளின் போதும் இலங்கை அரசியலை மிகவும் ஆழமாக அறிந்து வைத்திருந்தவரும்,ஒரு விடயத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை மிக நுணுக்கமாக அணுகும் வல்லமை வாய்ந்தவருமான அஷ்ரபின் நாமத்தை தங்களது வாதத்தை நியாயப்படுத்த தூக்கி பிடிக்கின்றனர்.இதில் அஷ்ரபின் கருத்துக்கள் முழுமையாக முன் வைக்கப்படாமல் அறை குறையாக முன் வைக்கப்படுவதை பல இடங்களிலே அவதானிக்க முடிகிறது.
த.தே.கூ தங்களது விடாப்பிடிக் கோரிக்கைகளில் ஒன்றாக வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்ற விடயத்தை அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் இடம்பெறும் இத் தருவாயில் முன் வைத்து வருகிறது.இதனை த.தே.கூ அவ்வளவு இலகுவில் அடைந்து கொள்ள முடியாது போனாலும் இது விடயத்தில் முஸ்லிம்கள் பொடு போக்காக செயற்பட முடியாதென்பது கடந்த கால வரலாறுகள் தரும் படிப்பினைகளில் ஒன்றாகும்.இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் பல்வேறு தடவைகள் வடக்கு,கிழக்கை நிரந்தரமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.எனினும்,பேரினவாத சிந்தனைகள் அதற்கு தடை போட்ட வண்ணமே உள்ளன.இதனை சாதித்துக்கொள்ள தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தடைகள் பல வந்தாலும் அவற்றை தகர்த்தெறிந்து தங்கள் இலக்கை அடைய அன்று தொடக்கம் இன்று வரை உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தே வருகின்றனர்.தற்போது வடக்கு,கிழக்கை இணைப்பதற்கு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவைப்படுகிறது.இந்த ஆதரவை எடுத்துக்கொள்ளும் முகமாக அஷ்ரபின் நாமம் தமிழ் அரசியல் தலைமைகளின் வாய்களில் உச்சரிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
இது தொடர்பில் மு.காவின் 19வது தேசிய மாநாட்டில் வைத்து வடக்கு,கிழக்கு இணைப்பு விடயத்தில் தாங்கள் மர்ஹூம் அஷ்ரபுடன் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்ததாக த.தே.கூவின் தலைவர் இரா சம்பந்தன் கூறியிருந்தார்.அண்மையில் இது பற்றி வவுனியா நீதிமன்றத்தில் வைத்து ஊகவியலாளர்களின் வினாக்களுக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூவின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் அஷ்ரப் வடக்கு,கிழக்கு இணைப்பிற்கு எழுத்து மூல சம்மதம் தெரிவித்திருந்ததாக கூறியிருந்தார்.அஷ்ரப் வடக்கு,கிழக்கு இணைப்பிற்கு ஆதரவா என்றால் “ஆம்” என்பது தான் அவரின் வார்த்தைகளை நினைவூட்டுவதிலிருந்து கிடைக்கும் பதிலாகும்.இங்கு முன் வைக்கப்பட்ட அஷ்ரபின் நிபந்தனைதான் மிக முக்கியமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.அதனை ஏன் த.தே.கூவினர் கூறத் தயங்குகின்றனர்? இதனை சுமந்திரன் அறியாதவருமில்லை.குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் பிரிபடாத இலங்கைக்குள் வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு பலம் பொருந்திய தனி இராஜியமொன்றை தங்களுக்கென்று அமைத்து தாங்களே அதனை ஆளும் நோக்கில் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.கிழக்கில் தமிழர்களின் விகிதத்தை விட முஸ்லிம்,சிங்கள மக்களின் கூட்டு இன விகிதம் அதிகமாகும்.கிழக்கில் தமிழர்களை விட முஸ்லிம்கள் சிறு விகிதமே குறைவாகவுமுள்ளனர்.வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தனித்திருக்கும் போது கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தாலும் அதனை ஆட்சி செய்ய எப்போதும் சிங்கள,முஸ்லிம் மக்களில் தங்கியிருக்கும்.இன்றுள்ள நிலைமைகளின் படி தமிழ் கட்சிகள் பேரினக் கட்சிகளுடன் உடன்பாட்டு அடிப்படையில் செல்லக் கூடியதாகவுமில்லை.முஸ்லிம் கட்சிகளோ பேரினக் கட்சிகளின் முந்தானையில் தான் தங்களது அரசியலை செய்கின்றன.கிழக்கில் தமிழர்கள் இன விகிதத்தில் அதிகமாகவிருந்தும் கிழக்கின் ஆட்சிக்கு வேறு இனங்களில் தங்கியுள்ளது.சில வேளை ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலையுமுள்ளது.தமிழர்கள் கிழக்கின் ஆட்சியை கைப்பற்ற முடியாது போகின்ற போது உண்மையில் இன ரீதியாக தமிழர்கள் அதனைப் பொருந்திக்கொள்வது கடினம் தான்.இலங்கையில் தமிழர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த வட மாகாணம் உள்ளது.கடந்த இரு கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களிலும் முஸ்லிம்கள் கிழக்கு மாகாண ஆட்சியை கைப் பற்றக்கூடிய சாதகமான நிலை தோன்றியிருந்தாலும் அது அவர்களுக்கும் தொடர்ந்தும் நிலையானதல்ல.அவர்களும் தங்களது ஆட்சிக்கு இன்னுமொரு இனத்தின் மீது தங்கியே உள்ளார்கள்.கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்,தமிழ் ஆகிய இரு இனங்களுக்கும் ஒரு அதிகாரப்பகிர்வின் தேவை உணரப்படுவதை அறிந்துகொள்ளலாம்.இரு இனங்களும் எதிர்காலத்தில் பாதிக்கப்படாத வகையிலான தீர்வுத் திட்டமொன்றும் அவசியமாகிறது.இது இனவாதத்தை அடிப்படையாக கொண்ட சிந்தனைதான்.இனவாத சிந்தனைகளை களைந்து சிந்தித்தால் அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து கூடிக் குலாவி ஆட்சி செய்யும் ஒரு இடமாக கிழக்கு மாகாண சபையை மாற்றலாம்.இன்று இலங்கை நாட்டை பேரினவாதம் ஆட்டிப்படைப்பதால் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனைகளும் காலத்தின் தேவையாகும்.இவ்வாறான பின் புலங்களை உணர்ந்து தான் அஷ்ரப் வடக்கு,கிழக்கு தொடர்பில் ஒரு நிபந்தனையை முன் வைத்திருந்தார்.அது தான் நிலத் தொடர்பற்ற மாகாண சபையாகும்.இதனை அஷ்ரப் அவர் மரணிப்பதற்கு முன்பு 1999ம் ஆண்டு சரிநிகர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.இது அவர் மரணிப்பதற்கு சில மாதங்கள் முன்பு கூறப்பட்டிருப்பதால் இதனை அவரது இறுதி நிலைப்பாடாகவும் நோக்கலாம்.
இது தொடர்பான அப் பேட்டியின் ஒரு சிறு பகுதி
“தற்போது தென் கிழக்கு என்று சொல்லப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தை அடித்தளமாகக் கொண்டும் மட்டக்களப்பு,மன்னார்,திருமலை,வன்னி,யாழ்ப்பாணம் ஆகிய வடகிழக்கின் சகல மாவட்டங்களிலும் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்களோ முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அவற்றை நிலத் தொடர்பற்ற வகையில் இணைப்பதுதான் மு.காவின் நிலைப்பாடாகும்”
என இது விடயத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.இன்று தமிழ் தரப்புக்கள் கூறுவது போன்று அவர்களுடன் அஷ்ரப் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது மறுக்க முடியாத உண்மை.ஏனெனில்,குறித்த சரிநிகர் பத்திரிகைக்கைக்கு வழங்கிய பேட்டியில் மேலுள்ள கருத்தை தொடர்ந்து தான் தமிழ் தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் தமிழர் விடுதலை கூட்டணி அப் பேச்சு வார்த்தை மேசையில் இறுதி வரை இருந்ததாகவும் கூறியுள்ளார்.மேலும்,புளொட்டின் நிலைப்பாடு என்னவென்றால் அது முஸ்லிம்களுக்காக எதனையும் கொடுப்பதற்கு தயாராக இருந்தது என அஷ்ரப் கூறியுள்ளார்.இது ஒரு விடயத்தை புலனாக்குகிறது.அஷ்ரப் இணைந்த வடக்கு,கிழக்கில் ஏதோ ஒன்றை தமிழர்களிடம் கேட்டுள்ளார் என்பதாகும்.அந் நிபந்தனை நிலத்தொடர்பற்ற தென் கிழக்கு அலகாகவே இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இதனை தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.குறிப்பாக ஒரு பிராந்தியந்தின் பலம் அதிலுள்ள மக்கள் எண்ணிக்கையிலும் நில விஸ்தீரனத்திலும் தங்கியிருக்கும்.கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்,சிங்கள மக்கள் ஒரு பெரும் சதவீதம் வாழ்வதன் காரணமாக அவர்களை இணைந்த வடக்கு,கிழக்கிற்குள் உள் வாங்கும் போது வடக்கு,கிழக்கு பிராந்தியம் மிகப் பெரும் பலத்துடன் திகழ்வதோடு இவ்வினங்கள் சிறிதும் தாக்க செலுத்தாத வகையில் அவற்றின் இன விகிதமும் மாற்றமுறும்.இன்றைய இலங்கையில் ஒரு இனம் இன்னுமொரு இனத்தை ஆள்வதை அலாதிப் பிரியமாகவும் கொண்டுள்ளது.இவற்றிற்காகத் தான் சுமந்திரன் போன்றோர் அஷ்ரப் வடக்கு,கிழக்கை இணைக்க சம்மதித்திருந்தார் எனக் கூறினாலும் அவர் முன் வைத்த நிபந்தனைகள் பற்றி வாய் திறக்காமல் இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
தமிழ் அரசியல் தலைமைகள் அஷ்ரபின் கருத்தை பூரணமாக கூறாது அதில் ஒரு பகுதியைக் கூறி முஸ்லிம்களுக்கு அடிமைச் சாசன அழைப்பை விடுப்பதை ஒரு போதும் ஏற்க இயலாது.இதனை தெளிவு படுத்த வேண்டியதன் அவசியம் ஏனையவர்களை விட மு.காவிற்கே அதிகமுள்ளது.இது தொடர்பில் பூரண தெளிவு இது தொடர்பில் மிகவும் அக்கறையுடன் கருத்து வெளியிடும் மு.காவின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு உள்ளதாகவும் நான் நம்புகிறேன்.சுமந்திரன் போன்றோரின் இக் கூற்றிற்கு மு.காவின் செயலாளர் ஹசனலி உட்பட மு.காவைச் சேர்ந்த யாருமே வாய் திறக்கவில்லை.இதற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அஷ்ரபுடன் பிற்காலத்தில் முரண்பட்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பதிலளிக்கும் நிலைமையில் அஷ்ரபின் பிரதான கொள்கைகளில் ஒன்று உள்ளமை தான் கவலைக்குரிய விடயமாகும்.இது மு.கா அஷ்ரபின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு வேறு திசையில் பயணிக்கின்றதா என்ற வினாவையும் தோற்றுவிக்கின்றது.இது தொடர்பில் சுமந்திரன் பதிலளித்த போது அஷ்ரப் நிலத் தொடர்பற்ற தென் கிழக்கு அலகை கோரினார் என்ற விடயத்தை மறைத்துக் கூறியது மாத்திரமல்லாது அந்த நிலைப்பாட்டையே தற்போதைய மு.காவும் வலியுறுத்துவதாக பகிரங்கமாகவே கூறியிருந்தார்.சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்.அவருடைய கருத்தை பல இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவும் நோக்கலாம்.இதன் போது மு.கா தென் கிழக்கு அலகு போன்ற எந்த நிபந்தனையையும் முன் வைக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு,கிழக்கு இணைப்பிற்கு சம்மதம் தெரிவித்து விட்டதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருந்தது.
மு.கா இந்த நிலைப்பாட்டையே தங்களிடம் வலியுறுத்துவதாக சுமந்திரன் கூறியதால் இதற்கு பதில் அளிக்க வேண்டிய தார்மீக கடமை மு.காவிற்குள்ளது.சுமந்திரனின் இக் கூற்று முஸ்லிம் மக்களிடத்தில் மு.கா மீது மிகப் பெரும் சந்தேக பார்வையை தோற்றுவித்திருந்தது.இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு அமைச்சர் ஹக்கீம் தள்ளப்பட்டார்.இதன் போது சுமந்திரன் இவ்விடயத்தைக் கூறிய குறித்த தினமே கண்டியில் வைத்து மு.கா வடக்கு,கிழக்கு இணைப்பிற்கு சம்மதம் தெரிவித்துவிட்டது எனக் கூறுவதில் எந்த உண்மையுமில்லை எனக் கூறியிருந்தார்.அமைச்சர் ஹக்கீம் வடக்கு,கிழக்கு இணைப்பிற்கு தாங்கள் சம்மதமில்லை என்றோ வடக்கு,கிழக்கு இணைக்கப்படுவதில் இதுவே தங்களது நிலைப்பாடு என்றோ வெளிப்படையாக எதனையும் கூறவில்லை.சுமந்திரன் தற்போதைய மு.கா வடக்கு,கிழக்கு இணைப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ளது என்ற அடிப்படையில் கூறியுள்ளதால் அமைச்சர் ஹக்கீம் இது பொய்யென சுமந்திரனின் பெயரை சுட்டிக்காட்டி மறுத்திருக்க வேண்டும்.பெயரைச் சுட்டிக்காட்டி மறுக்குமளவு சுமந்திரனின் நாமம் தகுதியானதுமாகும்.அமைச்சர் ஹக்கீமின் மறுப்பில் சுமந்திரனின் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுமந்திரன் தனது கருத்தை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்.இதில் திரைமறைவில் நடந்தேறிய சில உண்மைகளும் வெளியாகியிருக்கலாம்.இதன் போது அமைச்சர் ஹக்கீம் சுமந்திரனை எங்கும் தாக்காது மக்களிடம் பரவி வரும் வதந்திகளுக்கு பதில் அளிப்பது போன்று பதில் அளித்து இவ்விடயத்தை சாணக்கிய முறையில் கையாண்டிருந்தார்.இது தொடர்பான மக்களின் அச்சப் பார்வைக்கு அமைச்சர் ஹக்கீம் பதில் அளிப்பதென்றால் எப்போதோ பதில் அளித்திருக்க வேண்டும்.
அஷ்ரப் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படாதென உறுதியாக இருந்ததன் காரணமாகத் தான் நிலைத்தொடர்பற்ற மாகாண சபையை கோரியதாக சிலர் கூறுகின்றனர்.அஷ்ரப் மரணிப்பதற்கு முன்பு சரிநிகர் பத்திரிகைக்கும் வழங்கிய பேட்டியில் ஜனாதிபதியாகவிருந்த விஜயதுங்க தன்னை அழைத்து வடக்கு,கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவோமா எனக் கேட்டதாகவும் மு.கா நினைத்திருந்தால் இதனை பிரித்திரிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.இங்கு அஷ்ரப் வடக்கு,கிழக்கை பிரிப்பதை அல்லது இணைத்தலை எதிர்க்கவில்லை என்ற விடயமும் அவ்வாறு இணைக்கப்படும் போது அதில் நிலத்தொடர்பற்ற மாகாண சபை முஸ்லிம்களுக்கான தீர்வு என்பதையும் அறிந்துகொள்ளச் செய்கிறது.இங்கு அஷ்ரப் வடக்கு,கிழக்கு இணைக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளாரே என்ற வினா எழலாம்.இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கு,கிழக்கில் முஸ்லிம்களுக்கு எந்தத் தீர்வும் முன் வைக்கப்படவில்லை எனும் போது அதனை எதிர்க்கத் தானே வேண்டும்.சரியோ பிழையோ அது இணைக்கப்பட்டு விட்டது.இப்போது முஸ்லிம்கள் தங்களின் தீர்வுப் பொதிகளை நோக்கி பயணத்தில் இரு பாதையில் பயணிக்கவே வாய்ப்புள்ளது.ஒன்று வடக்கு,கிழக்கை பிரிப்பதன் மூலம் தான் முஸ்லிம்களுக்கு தீர்வென்றால் அது பிரிக்கப்பட வேண்டும்.இரண்டாவது இணைக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணத்தினுள் முஸ்லிம்களுக்கு ஏதாவது தீர்வு உள்ளது என்றால் வடக்கு,கிழக்கை பிரிக்க கோசம் எழுப்பாது தமிழ் மக்களுடன் முரண்படாத வகையில் அந்த தீர்வை பெற்றுக்கொள்ள முயல வேண்டும்.அஷ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்தை பெரிதும் நம்பியிருந்தார்.அஷ்ரபின் அரசியலுக்கு வித்திட்டவர்களில் இவர் பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக அமிர்தலிங்கத்தின் காலப்பகுதியில் இணைந்த வடக்கு,கிழக்கு மாகாணத்தில் ஒரு தீர்வு கிடைக்கலாம் என்பதையும் அவர் அதிகம் நம்பியிருந்தார்.இதனை அவர் 1999ம் ஆண்டு சரிநிகர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அமிர்தலிங்கம் இருந்த காலப்பகுதியில் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்த விரும்பவில்லை என்ற விடயத்தை கூறுவதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ் மக்கள் இணைந்த வடக்கு,கிழக்கு மாகாணத்தை தங்களது உரிமைகளில் ஒன்றாக கோரி ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.இதன் காரணமாக வடக்கு,கிழக்கு இணைப்பு பற்றி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகள் தங்களது தங்களது நிலைப்பாட்ட வெளிப்படுத்த வேண்டிய காலத்தின் தேவையாகும்.அமைச்சர் றிஷாத் இது பற்றி தனது பூரண எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.அமைச்சர் ஹக்கீம் திரைமறைவில் இதற்கு சம்மதம் அளித்துள்ளதாக கதைகள் பரவிச் செல்கின்ற போதும் வெளிப்படையாக எதுவுமே கூறவில்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது வடக்கு,கிழக்கு இணைப்புக் கோரிக்கையை பகிரங்கமாக முன் வைத்துள்ளதால் இது தொடர்பில் மு.கா தங்களது நிலைப்பாட்டை பகிரங்கமாக முன் வைப்பதில் எந்தத் தவறுமில்லை.முஸ்லிம்கள் கட்சிகளை நம்பி முஸ்லிம்கள் வேடிக்கை பார்க்க முடியாதென்பது வரலாறுகளை நினைவூட்டிக் கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளத்தக்க படிப்பினைகளாகும்.இன்று சர்வதேச அரங்கில் மு.கா இலங்கை முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக தோற்றமளிக்கின்றது.தற்போது தான் சர்வதேச அரங்கில் அ.இ.ம.கா முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக உருவெடுத்து வருகிறது.வடக்கு,கிழக்கு இணைப்பிற்கு மு.கா ஆதவளிக்கின்ற போது அது சர்வதேச அரங்கில் முஸ்லிம்களின் கருத்தாகவும் நோக்கப்படலாம்.இதன் காரணமாக இது தொடர்பான மு.காவின் நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் மிக அவதானமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
குறிப்பு: இக் கட்டுரை இன்று 07-10-2016ம் திகதி வெள்ளி கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 65 கட்டுரையாகும்.