நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்தது.
விராட் கோலி 103 ரன்களுடனும், ரகானே 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தொடக்கம் முதலே இருவரும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்து விளையாடினர்.
விராட் கோலி 273 பந்துகளிலும், ரகானே 300 பந்துகளிலும் 150 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் கோலி, 347 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதில்19 பவுண்டரிகள் அடங்கும்.
இதனையடுத்து விராட் கோலி 211 ரன்களிலும், ரகானே 188 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கோலி, ரகானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 648 பந்துகளில் 350 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் ஜோடி சேர்ந்து விளையாடினர். விரைவாக ரன் சேர்ப்பில் ஈடுபட்ட ரோகித் சர்மா சிக்ஸர் அடித்து அரைசதம் விளாசினார்.
இந்திய அணி இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 557 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். அப்போது, ரோகித் சர்மா 51(63), ஜடேஜா 17(27) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. குப்டில் 17(30), லாந்தம் 6(24) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இன்னும் மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் நியூசிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்குவித்தால் நிச்சயம் டிராவில் முடிவடையும்.