சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 28 பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை

(ஆவணப்படம்)

 

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 28 பேருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் 10 வருடங்களுக்கு சிறைத்தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாசிக்குடா கடலில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 28 பேர்களின் வழக்கு விசாரணை மீண்டும் வியாழக்கிழமையன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சாட்சியங்களை விசாரித்து அறிந்த நீதிபதி தலா 50 ஆயிரம் ரூபா குற்றப்பணமும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வெளிமறியலும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.

கடந்த 4 வருடங்களாக தொடரப்பட்ட மேற்படி வழக்கானது கடந்த வியாழக்கிழமையுடன் முடிவிற்கு வந்திருந்தது.

கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேற்படி நபர்கள் பாசிக்குடா பிரதேச கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரினால் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்றில் மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தனர்.

இதன்போது முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபா குற்றப்பணம் செலுத்தும் படியும் மீதிப் பணத்தினை எதிர்வரும் 27.10.2016 ஆம் திகதி செலுத்தும் படியும் நீதிமன்றில் கட்டளையிடப்பட்டது.

இதேவேளை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணத்திற்கு மேலதிகமாக 12 மாதகால கடூழிய சிறைத்தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.