தமிழக ஆளுநருடன் அமைச்சர்கள் முக்கிய சந்திப்பு , அதிரடி அறிவிப்பு வெளியாகலாம்

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் அளித்த சிகிச்சையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், மேலும் பல்வேறு பரிசோதனைகள் செய்யவேண்டியிருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்தது. 

 

201610071848212713_tamil-nadu-senior-ministers-and-chief-secretary-meets-with_secvpf-gif

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டுஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தார். 
பின்னர் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்மானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ்நாயக் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் வந்து பரிசோதித்து அடுத்தக்கட்ட சிகிச்சை முறைகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி டாக்டர்களிடம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டும் ஆஸ்பத்திரிக்குள் சென்று ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி கேட்டு அறிந்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு வெளியிட்ட விரிவான மருத்துவக் குறிப்பில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாகவும், தேவையான ‘ஆன்டிபயாடிக்’குகள், சுவாச உதவி மற்றும் அதனுடன் தொடர்புடைய முழுமையான மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால் மேலும் நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நீண்டகாலம் மருத்துவமனையில் இருப்பதால் அவரது துறை சார்ந்த பணிகளை கவனிக்க முடியாத நிலை இருப்பதை சுட்டிக்காட்டி தற்காலிக முதல்வர் அல்லது துணை முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலர் முன்வைத்தனர். 

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இன்று மதியம் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அப்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது. அதன்பின்னர் இன்று மாலையில் மீண்டும் ஆளுநரை சந்தித்தார். இப்போது அவருடன் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் அவருடன் ஆளுநரை சந்தித்தனர்.

ஏற்கனவே முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகள் ஒருபுறம், அரசு நிர்வாகம் தொடர்பான கேள்விகள் மறுபுறம் என அரசியல் அரங்கல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஆளுநருடன் அமைச்சர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிரடி அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.