‘மேத்யூ’ புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன!

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 
201610070239285404_matthew-storm-rushes-for-20-million-people-in-the-us_secvpf
அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால், பலத்த மழை கொட்டியது. ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான ரோடுகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது. கியாஸ் நிறுவனங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. 

இதனால் ஏராளமான வாகனங்கள் ஓடாமல் ரோட்டோரம் வரிசையாக நிற்கின்றன. கியாஸ் நிரப்பும் நிலையங்களில் காத்து கிடக்கின்றன. உணவு பொருட்கள் சப்ளை இல்லாததால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஹைதியில் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேத்யூ புயலுக்கு 339 பேர் பலியானதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்தும், மரங்கள் முறிந்து விழுந்ததில் சிக்கியவர்கள் ஆவர். 

மீட்பு பணியின்போது மேலும் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஹைதியில் மட்டும் மேத்யூ புயல் மற்றும் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 478 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒருவர் பலியாகி உள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.