காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 19 இந்திய ராணுவ வீரர்களை கொன்றனர். அந்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவமே அனுப்பி வைத்தது உறுதிப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை ஏவி விடுவதால் அந்த நாட்டை தீவிரவாதிகள் நாடாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய உலக நாடுகளை வற்புறுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமும் இந்த கோரிக்கையை விடுத்தது. இதை தொடர்ந்து பல நாடுகளும் பாகிஸ்தானை கண்டித்து வருகின்றன.
ஆனால், பாகிஸ்தானை தீவிரவாதிகள் நாடாக அறிவிக்க முடியாது என்று அமெரிக்கா கூறி இருக்கிறது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜான்கிர்பி கூறியிருப்பதாவது:-
இந்தியா- பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் குறித்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அந்த பகுதியை பாதுகாப்பான இடமாக மாற்றுவதுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையும் தீர்க்க இருநாடுகளும் உரிய முடிவுகளை காண வேண்டும்.
காஷ்மீர் பிரச்சனை உள்பட அவர்களுக்கிடையே இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். இதற்கான முயற்சிகளை எடுத்து அந்த பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள பதட்டநிலையை தணிக்க முன்வர வேண்டும்.
இது சம்பந்தமாக கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதா? என்பது பற்றி குறிப்பிட்டு சொல்ல முடியாது. இது சம்பந்தமாக எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக கூற முடியாது.
அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பொது அச்சுறுத்தல், பொது சவால்கள் போன்றவற்றை முறியடிக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்போம். அந்த பிராந்தியங்கள் பாதுகாப்பான பகுதியாக மாற வேண்டும் என்பதற்காக எங்களுடைய பணிகள் தொடர்ந்து நீடிக்கும். பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது அவர்களுடைய பிரச்சனை. அவர்களே தீர்வு காண வேண்டும். அதற்கு நாங்கள் உரிய ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து மோதல் போக்குகள் இருந்து வருகின்றன. அவர்கள் இதை குறைக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். எப்போதும் போல் இந்த இரு நாடுகளுடன் ஒத்துழைத்து செயல்படுவோம்.
அந்த நாட்டு தலைவர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளின் நிலைமை மோசம் ஆகி விடாமல் தங்கள் நாடுகளின் மக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி உரிய நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.