5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கானும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவானதை தொடர்ந்து பகல்-இரவு டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியா முதல் முறையாக பகல்- இரவு டெஸ்டை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய பகல்-இரவு டெஸ்ட் அடிலெய்ட்டில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது பகல்-இரவு டெஸ்ட் அடுத்த வாரம் நடத்தப்படுகிறது. இதில் பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை இந்த பகல்-இரவு டெஸ்ட் துபாயில் நடக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு (2017) ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை எட்ஜ்பஸ்டனில் பகல்-இரவு டெஸ்ட் நடக்கிறது.
இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. இந்த பகல்-இரவு டெஸ்டில் இங்கிலாந்து அணி வெஸ்ட்இண்டீசுடன் மோதுகிறது.
வெஸ்ட்இண்டீஸ் அணி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் பகல்-இரவாக நடத்தப்படுகிறது.