அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள கரிபீயன் கடல் பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. மாத்யூ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நேற்று ஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளை தாக்கியது.
கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த புயல் மிக மோசமாக இருந்தது. 230 கிலோமீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் இரு நாடுகளிலும் கடுமையான சேதம் ஏற்பட்டன.
ஆனாலும் வலு இழக்காத புயல் இன்று அதிகாலை கியூபா நாட்டை தாக்கியது. இதில் அந்த நாடும் கடுமையான சேதத்தை சந்தித்தது.
தற்போது புயல் பகாமாஸ் தீவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு புயல் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு பெலிக்ஸ் என்ற புயல் புளோரிடா பகுதியை தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
அதே போல இந்த புயலும் கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி புளோரிடா கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதுகாப்பு கருதி கடலோர பகுதியில் வசிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு ஆபத்து இல்லாத பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புளோரிடாவை தொடர்ந்து புயல் தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளையும் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாளை நியூஜெர்சி மற்றும் நியூயார்க் பகுதிகளையும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.