மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் கைப்பற்றப்பட்ட உடற் பாகங்கள் தாஜூடினுடையதா ?

waseem-thajudeen-640x400மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் கைப்பற்றப்பட்ட உடற் பாகங்களை மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்துள்ளது. 

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மாலபே தனியார் மருத்து கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 26 மனித உடற்பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினார். 

இதன்படி இவற்றில் வசிம் தாஜூடினின் உடற் பாகங்கள் உள்ளதாக என்பதை அறிய அவற்றை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார். 

விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இதற்கான அனுமதியை வழங்கினார். 

இதுஇவ்வாறு இருக்க இந்த வழக்கு தொடர்பில் சாட்சியங்களை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் 19ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.