தமிழ் மக்கள் வரலாறு முழுக்க அதிகமான நல்ல சந்தர்ப்பங்களை இழந்தது தான் எங்களது வரலாறாக இருக்கின்றது என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கல்குடா கல்வி வலயத்தில் உள்ள முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் 125வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும், விருட்சம் சஞ்சிகை வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (03.10.2016) திங்கள் கிழமை வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
1987ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் மூலம் ராஜீவ்காந்தி வந்து வடக்கு கிழக்கை இணைத்து ஒரு மாணில ஆட்சியை தருவதற்கு முயற்சியை செய்த போது அதனை தட்டி விட்டோம் இதனைச் சொல்லி யாருடைய மனதையும் நான் புண்படுத்த விரும்பவில்லை உண்மையைச் சொல்கின்றேன் அதன் பிறகு 2005ம் ஆண்டு தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமஸ்டி ஆட்சியை தருவதற்கு முன்வந்த போது அவரை நாங்கள் தோற்கடித்தோம் வாக்களிக்காமல் தோற்கடித்து அந்த சந்தரப்பத்தை இழந்தோம்.
அதற்கு முதல் 2000ம் வருடத்தில் அப்போதைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு முன்னேற்றகரமான ஒரு தீர்வுப் பொதியை கொண்டு வந்த பொழுது அதனையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்துவிட்டோம் 1986, 2000, 2005ம் வருடம் ஆகிய மூன்று தரணங்களிலும் நாங்கள் எங்களை தேடிவந்த நல்ல சந்தர்ப்பங்களை இழந்து விட்டோம்.
இதுதான் உண்மை அத் தீர்வுகள் எல்லாம் முழுமையான தீர்வுகள் என்றோ சிறப்பான தீர்வுத்திட்டம் என்றோ சொல்ல வரவில்லை ஆனால் இன்று நாங்கள் எதிர்பார்த்துக்கொணடிருக்கின்ற தீர்வுகளை விட முன்னேற்றகரமான தீர்வுகள் வந்தது என்பது உண்மை இதனை மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் விளங்க வேண்டும்.
ஆகவேதான் இப்பொழுது நாங்கள் எல்லோரும் சேர்ந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறோம் இதன் மூலம் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் முஸ்லீம் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய எல்லோருக்கும் நியாயத்தை பெற்றுத்தரக்கூடிய ஒரு தீர்வை பெற்றுத்தரக்கூடியதான ஒரு யோசனை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், ஜீ;.ஸ்ரீநேசன் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் என்.இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.கிருஸ்ணப்பிள்ளை, கே.கருணாகரம், எம்.நடராஜா மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்கரன், சுவிஸ்லாந்து நாட்டு பிரஜைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் சாதனை படைத்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை நிருவாகத்தினால் அதிதிகள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அமைச்சர் மனோ கணேசனினால் விருட்சம் சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
அஷாஹிம்