முஸ்லிம்களுக்கும் சேர்த்து தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே தமிழரசுக் கட்சி குரல் கொடுக்கின்றது

 ஓட்டமாவடி பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயம், மயானம் மற்றும் மக்களின் காணிகள் என்பவற்றை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த போது தான் சுவீகரித்தேன் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் வெளியிட்ட ஒலி நாடா என்னிடம் உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
 
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா வித்தியாலய மைதானத்தில் இன்று நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

yogeswaran-s-575-01-e1467015534550_fotor
முறாவோடைக் கிராமமானது பூர்வீக தமிழ் கிராமம். இக்கிராமத்தின் எல்லை தற்போது உள்ளவையல்ல. அவை நாடளவில் சுவீகரிக்கப்பட்டு சகோதர இனத்தவர்கள் இக்கிராமத்திற்குள் ஊடுருவி விட்டார்கள்.
 
யுத்த சூழலால் இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து சென்றவர்களின் சிலர் இங்கு இன்னும் குடியேறவில்லை. மீள்குடியேறியவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சிலர் இங்கு இன்னும் வரவில்லை.
 
இக்கிராம மக்கள் இங்கு குடியேறினால் நாங்கள் இன்னொருவருடன் சண்டைபோட வேண்டிய தேவையில்லை. ஒப்பக் காணிகள் உள்ள போதிலும் அதில் குடியேறாமல் இருந்ததால் தற்போது காணிக்காக போராடுகின்றோம்.
 
இங்குள்ள ஆலயத்திற்குள் இந்து சமயத்திற்கு முரணான பொருட்கள் வீசப்படுவதாகவும், இக்கிராம பெண்கள் வெளியே செல்லும் போது சேட்டைகளையும் செய்வதும் சகோதர இனத்தவர்களின் செயற்பாடானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். 
இக்கிராம மக்களின் காணிகள் பல சுவீகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயமாக பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டால் பாரபட்டசமாக நடவடிக்கையே இடம்பெறுகின்றது. இப்போது அத்துமீறி இப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் விபரங்களை உடனடியாக பொலிஸார் பெற்றுக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
நாங்கள் இன்னொருவரின் காணிகளை, பொருட்களை சுவீகரிக்கச் செல்லவில்லை. எங்கள் மக்களின் வாழ்விடங்களை சுவீகரிக்கின்றார்கள். அதில் எங்கள் மக்களில் தவறு உள்ளது. சில காணிகளை விற்றதும் நமது மக்களே. இதனாலே ஆலயத்திற்கு முன்னால் பொருட்களை வீசக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
 
நான் சகோதர மக்களுக்கு எதிரானவர் அல்ல. அந்த மக்களுக்கும் காணிகள் தேவை. அவ்வாறு காணிகள் தேவையெனில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கத் தேவையில்லை. தங்களுக்குரிய இடங்களை அரசுடன் பேசி பெற்றுக் கொள்ள வேண்டும்.
 
தங்களுக்கு இருக்கின்ற அரசியலை பயன்படுத்தி தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறிக் குடியேற வேண்டாம். நாங்கள் அரசுடன் இணையவில்லை என்று கொண்டு. வருகின்ற அரசாங்கத்துடன் தாவிப் பாய்கின்ற தன்மையைக் கொண்டவர்கள் என்ற வகையில் எங்கள் மக்களின் காணிகளை சுவீகரிக்க முற்படுகின்றனர்.
 
சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் எந்த அரசாங்கம் வந்தாலும் தாவிப் பாய்கின்றவர்கள். அரசாங்கத்தை வைத்துக் கொண்டு எங்களது மக்களின் இருப்பிடங்களை பறிமுதல் செய்கின்றனர்.
 
1983ம் ஆண்டுக்கு முன் எங்கெல்லாம் மக்கள் உறுதிக் காணியுடன் குடியிருந்தார்களோ அந்த இடங்களையெல்லாம் கோரலாம். பயமுறுத்தலின் காரணமாக குறைந்த விலையில் விற்றுச் சென்றால் அதனை மீளப்பெறாம். இந்தச் சட்டத்தை நீங்கள் சரியாக பயன்படுத்துங்கள்.
 
ஓட்டமாவடி பகுதியில் கிட்டத்தட்ட 110 குடும்பங்கள் வாழ்ந்துள்ளனர். அங்கு பிள்ளையார் ஆலயம் இந்து கலாசார திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்தில் மீன் சந்தையாக உள்ளது. மயானம் இருந்த இடத்தில் தற்போது அரச கட்டடம் உள்ளது. இதற்கான உறுதிக் கொப்பிகள் என்னிடம் உள்ளது.
 
மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த போது இவ்விடங்களை தான் சுவீகரித்தேன் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வெளியிட்ட ஒலி நாடா என்னிடம் உள்ளது.
 
இவ்வாறு எங்களுடைய இருப்பிடங்களை இழந்துள்ளோம் இதனை பெறுவதற்கு எங்களுடைய மக்கள் முன்வருவதில்லை. நீங்கள் இழந்த காணிகளை சட்ட பூர்வமாக இப்போது பெறுவதற்கு முன்வாருங்கள்.
 
சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்திருந்த ஆதாரம் இருந்தால் காணிகளை வழங்குங்கள். ஆனால் தமிழ் மக்களுடைய காணிகளை சுவீகரிக்க இடமளிக்கமாட்டோம்.
 
ஒரு காணியின் நீண்ட கால உறுதியை பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்துள்ளேன். அந்த காணி ஒரு பெரிய பரப்பைக் கொண்டதாகவும், உறுதியைப் பார்த்தால் பல குடும்பங்கள் வெளியேற வேண்டியும் உள்ளது.
 
உடனடியாக அந்த எல்லையை பார்வையிட்டு குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அந்த இடம் உரியவருக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பலவாறான பிரச்சனைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.
 
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்துடன் இணையுங்கள் என்று பலர் வந்து என்னிடம் பேரம் பேசினார். இராணுவ அதிகாரி வேர்டி பெரேராவுடம் கூட பேசினார். ஆனால் நாங்கள் யாருக்கும் விலை போகவில்லை. எங்கள் மக்கள் இதற்காக எங்களை அனுப்பி வைக்கவில்லை.
 
எங்கள் மக்கள் இந்த மண்ணில் பட்ட துன்பங்களுக்கு நியாயமான தீர்வை இந்த மண்ணிலே பெற்று மண்ணில் வாழ வைப்போம் என்பதற்காக எங்களை அனுப்பினார்கள். அதற்காக இன்றுவரை பாடுபடுகின்றோம். இனியும் பாடுபடுவோம் அதில் உறுதியாகவுள்ளோம்.
 

வடக்கு கிழக்கை இணைக்க விட மாட்டோம் என சகோதர இனத்தவர்கள் குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள். வடக்கு கிழக்கை இணைக்காவிடின் நீங்கள் பிரிந்து செல்லுங்கள். வடகிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் நாங்கள் இணைந்திருப்போம்.
 
நாங்கள் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற கோரவில்லை. முஸ்லிம் மக்களுக்கும் சேர்த்தே கோருகின்றோம். அவர்களுக்கும் சேர்த்து தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே தமிழரசுக் கட்சி குரல் கொடுக்கின்றது.
 
அதனை குழப்பும் வகையில் சில அரசியல்வாதிகள் பிழையான தரவுகளை கூறுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு தனியாக அலகு தேவையாக, நிலத்தொடர்பு தேவையாக இருந்தால் வினயமாக பெற்றுக் கொள்ளுங்கள்.
 
தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கில் இணைந்த தாயகத்தில் வாழ வேண்டும். எங்களுடைய சகல அதிகாரங்களையும் பெறுவதில் தான் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
 
கிழக்கு கல்வி அமைச்சர் இதுவரைக்கும் ஒரு சிற்றூழியர் மற்றும் காவலாளி நியமனமோ எங்கள் மக்களுக்கு வழங்கவில்லை என்ற கவலையோடு உள்ளோம். அடுத்த வருடம் மாகாண சபை கலைந்துவிடும். அமைச்சர் எப்போது தான் நியமனங்களை செய்யப் போகின்றாரோ தெரியவில்லை.
 
அரசியல்வாதியாக மாறும் பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைளை செய்ய முடியும். கொஞ்சமாவது மாற்றிக் கொண்டு வருவாறாக இருந்தால் தமிழ் பாடசாலைகளில் நிலவும் குறைகளை தீர்க்க முடியும்.
 
இப்பிரதேசத்திற்கு என்னால் முடிந்த பல உதவிகளை வழங்கி வருகின்றேன். மென்மேலும் உதவிகளை வழங்குவேன் என்றார்.