போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தி வருவதால் போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

india-army

யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.

இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இருப்பினும் பாகிஸ்தான் தனது படைகளை சியால்கோட் எல்லைப்பகுதியை நோக்கி நகர்த்தி வருகிறது. 

இதையடுத்து எந்நேரமும் விழிப்புணர்வோடு இருக்குமாறும், போருக்கு தயாராகுமாறும் இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீரர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உள்ள வடக்கு பிராந்திய படையை சேர்ந்தவர்கள். 

ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக் உதம்பூருக்கு சென்றார். 

தாக்குதல் நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்த வீரர்களை அவர் பாராட்டினார். 

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்பட இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு நிலவரத்தை தல்பீர் சிங் ஆய்வு செய்தார். 

அங்கு உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். 

பாகிஸ்தான் படைகள் எல்லை நோக்கி வருவதால் மேற்கு பிராந்திய படையின் பதன்கோட், கத்துவா, சம்பா, ஜம்மு, அக்னூர் பிரிவு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 

அந்த படைகளின் முக்கிய அதிகாரிகள் அனைவரின் விடுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.