தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி ஆறாவது நாளாகவும் போராடுகின்றனர்

க.கிஷாந்தன்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி உடனடி சம்பள தீர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆறாவது நாளாகவும் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர்.

அந்த வகையில் 01.10.2016 அன்று அட்டன் நுவரெலியா வீதியை மற்றும் தலவாக்கலை நாவலப்பிட்டி வீதிகளை மறித்து பத்தனை சந்தியில் பத்தனை மவுண்ட்வேர்ணன், திம்புள்ள ஆகிய தோட்டப்பகுதிகளில் சுமார் 500 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் வீதியை மறித்து ஈடுப்பட்டனர்.

இவ்வாறு வீதியை மறித்து போராட்டங்களை நடத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை தொழிலாளர்களால் பத்தனை சந்தியில் டயர் ஒன்று எரிக்கப்பட்டது. இதன்போது ஸ்தலத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி ஒருவர் எரிந்துக் கொண்டிருந்த டயரை தூக்கி எரிய முற்பட்ட வேளையில் தீக்காயங்களுக்குள்ளாகினார்.

இவரின் கையில் ஏற்பட்ட தீ காயம் தொடர்பில் சிகிச்சை மேற்கொள்ள வைத்தியசாலைக்கு செல்வதாக அவர் கூறியமை குறிப்பிடதக்கது.

இதேவேளை 01.10.2016 அன்று பத்தனை கெலிவத்தை தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கெலிவத்தை தோட்ட மக்கள் குறித்த தோட்டத்தின் ஆலயத்தின் முற்றலில் 10 தேங்காய்கள் உடைத்து கோரிக்கைகளை கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.