கஅபாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த குறைஷியர்கள்..!

இறை இல்லமான கஅபாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர் குறைஷியர்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கஅபாவின் கட்டடம் பாதிப்படைந்து இருந்தது. அதனைப் புதுப்பிக்க வேண்டும் ஆனால், புனிதமான கஅபாவை முறையான வருமானத்தைக் கொண்டே செய்ய வேண்டுமென்றும்,  விபச்சாரம், திருட்டு, வட்டி, சொத்து அபகரிப்பு போன்றவற்றின் மூலமாகச் சேர்ந்த செல்வத்தை இக்காரியத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஒருமனதாகத் தீர்மானமானது. 
xeca3_032
புனிதமான இல்லத்தை எப்படி இடிப்பது? அது தெய்வக் குற்றமாகிவிடும் என்றும் குறைஷிகள் அஞ்சினர். அப்போது “நாம் நன்மையை வேண்டியே இக்காரியத்தைச் செய்கிறோமென்று இறைவன் அறிவான்” என்று சொல்லிக் கொண்டே வலீத் இப்னு முகீரா மக்ஜூமி என்பவர் கடப்பாரையை எடுத்து ஒரு பகுதியை இடித்தார். இடித்தவருக்கு ஒன்றுமே ஆகவில்லை என்று ஓர் இரவு காத்திருந்து தெரிந்து கொண்டவர்கள் மறுநாள் தைரியமாக இடித்துப் புதுப்பிக்கும் வேலைகளைத் தொடங்கினர். 
கஅபாவைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தினரும் ஒரு பகுதியைக் கட்ட தொடங்கினர். இறுதியாக இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் நிறுவிய இறை இல்லத்தில் அமைந்திருந்த சொர்க்கத்தின் கல்லென்று அறியப்படுகின்ற ‘ஹஜ்ருல் அஸ்வத்’தை யார் அதற்குரிய இடத்தில் வைப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஆரம்பித்தது. சாதாரணமாக ஆரம்பித்த வாய்த் தகராறு கைகலப்பு வரை சென்று இறுதியில் கோத்திரத்தாருக்கிடையில் போர் மூண்டுவிடும் அபாயம் எழுந்தது. 
அப்போது எல்லாக் கோத்திரத்தாரும் மதிக்கும் அபூ உமய்யா இப்னு முகீரா மக்ஜூமி என்பவர் மக்களிடம், “இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்வோமா?” என்று கேட்டார். அந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர். யார் அங்கு முதலில் நுழையப் போகிறார் என்று எல்லாரும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். அங்கு முதலாமவராக நுழைந்தது நபி முஹம்மது (ஸல்) அவர்கள். 
அவர்களைக் கண்டதும் எல்லோரும் “இதோ உண்மையாளர் வந்துவிட்டார், நம் நம்பிக்கைக்குரியவர் வந்துவிட்டார்” என்று ஏகமனதாக ஏற்றனர். இது குறித்து ஒன்றுமறியாத நபிகளார், கோத்திரத்தாரின் சிக்கலைப் பற்றி அறிந்து தெரிந்து கொண்டார்கள். போர் வரை வந்த சிக்கலை எல்லாரும் ஏற்கும்படி தீர்க்க வேண்டுமென்று மிகுந்த யோசனையில் இருந்துவிட்டு, ஒரு பெரிய விரிப்பை வரவழைக்கச் சொல்லி அதன் நடுவே அந்த ஹஜ்ருல் அஸ்வத்தை வைத்தார்கள். சண்டையிட்டுக் கொண்டிருந்த வெவ்வேறு கோத்திரத்தின் தலைவர்களை அவ்விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு சொன்னார்கள். அவர்களும் தூக்கினர். எல்லாரும் தூக்கி வைத்த மகிழ்ச்சி அவர்களுக்குக் கிடைத்தது. அதன்பின் கஅபாவிற்கு அருகில் வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது. 
முரட்டுத்தனமாக எப்போதும் சண்டையிட்டுக் கொள்ளும் அறியாமையில் இருந்த அரேபியர்களையும் தனது நேர்மை, நீதி, சிந்தனை, அறிவாற்றலைக் கொண்டு சமாளிக்கக் கூடியவராக விளங்கினார் நபிகளார். திருக்குர்ஆனில் ‘இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு உண்டு’ என்பதைப் பல சூழலில், பல்வேறு விதங்களில் புரிந்து கொள்ளலாம். 
(ஆதாரம்: இப்னு ஹிஷாம், திருக்குர்ஆன் 33:21)