சுகாதார பிரதி அமைச்சரே, சாம்பலும் சோறும் திண்ண வைக்காதே எமது ஊரை காப்பாற்றுங்கள்

(சுலைமான் றாபி) 

நிந்தவூர் 23ம் பிரிவில் அமைய பெற்றுள்ள உமி மூலம் இயங்கும் மின்சார நிலையத்தினை அகற்றக் கோரி இன்றைய தினம் (30) நிந்தவூர் பிரதேச பொது மக்களினால் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணியொன்று ஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து நடாத்தப்பட்டது.

14462874_1271096619589760_7251035166388540171_n

அந்த வகையில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பள்ளிவாயல்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஆகியவற்றுடன் பொதுமக்களும் இணைந்து கொண்டு மேற்படி மின் நிலையத்தினால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை சுலோக அட்டைகள் மூலமாக வெளிக்கொண்டு வந்தனர்.

மேலும் இந்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் :

கடந்த 2014 ம் ஆண்டு காலப்பகுதியில் இந்த மின் நிலையம் அமைய பெறக்கூடாது என்பதற்காக தாங்கள் சகல அரச திணைக்கள அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவித்திருந்ததாகவும், இதில் அரசியல் தலையீடுகள் மேலோங்கி உள்ளதால் இம்மின் நிலையம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டு வருகின்றது. இதனால் தற்போது தங்களின் 60 வீதமான பயிர்ச்செய்கை வாழ்வாதாரம் உட்பட தங்களது உயிர்களையும் காவு கொள்ளத் துவங்கியிருப்பதாகவும், இந்த மின் நிலையம் குறிப்பாக பலவகைப் பொதுப் பிரச்சனைகளை தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

14470626_1271096386256450_3974357853330262987_n

மேலும் இந்த மின் நிலையத்திலிருந்து வெளியாகும் புகையுடன் கூடிய சாம்பலானது வீடுகள், பள்ளிவாயல்கள், பாடசாலைகள் போன்ற முக்கிய இடங்களில் படிவதனால் தங்களுக்கு சுவாச நோயுடன் கூடிய உயிர்பறிக்கும் நோய்களும் ஏற்பட்டு அதில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு படியும் சாம்பலினால் பாடசாலை மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகைகளையும் தொடர முடியாமல் தவிப்பதாகவும், அவர்களின் பாடசாலை ஆடைகளை வெய்யிலில் உலரவைக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும், அவ்வாறு உலர வைத்தாலும் அந்த ஆடைகளில் சாம்பல் துகள்கள் படிந்து காணப்படுவதாகவும் இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.

அத்தோடு இந்த மின் நிலையம் அமைய பெற்றதினால் அதன் செயற்பாட்டிற்கு தங்கள் பகுதிகளில் உள்ள 07 ஆழமான கிணறுகள் மூலமாக தினமும் நிலத்தடியிலிருந்து நீர் உறுஞ்சப்படுவதனால் தங்கள் பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைவதுடன், இந்த மின் நிலையத்தினால் வெளியாகும் சாம்பல்கள் தங்களது கிணறுகளில் படிவதனால் கிணற்று நீர் மாசமடைந்து எண்ணைப் படலம் போல் காட்சியளிப்பதோடு, தங்களால் உபயோகிக்க முடியாதுள்ளதாகவும் இம்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரானது வடிகான் ஊடாக வயல் நிலங்களுக்குச் சென்று ஆற்றுடன் சேர்வதனால் விவசாயம், மீன்வளம் என்பன கூடுதலாக பாதிக்கப்படுவதாகவும் இம்மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட மக்களினால் சாம்பலும் சோறும் திண்ண வைக்காதே, தனிப்பட்ட நபரின் தேவைக்காக நாம் இறக்க வேண்டுமா, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரே எமது சிறுவர்களின் கல்வி அறிவு நாட்டுக்கு தேவையில்லாததா, சுற்றாடல் அமைச்சரே எமது சூழல் மாசுபடுவற்கு உமது பதில் என்ன? சுகாதார பிரதி அமைச்சரே..! எம்மையும், எமது ஊரையும் காப்பாற்றுங்கள், மக்கள் வாழும் பகுதியில் மின் நிலையம்.! அனுமதித்தது யார்? இதய நோயாளிகள் எங்கே போய் வாழ்வது ? நல்லாட்சி அரசே மின் நிலையத்தை உடனே அகற்று, எமது கண்களை சாம்பல் கொண்டு நிறப்பாதே, நல்லாட்சியில் எமக்கு விடிவு காலம் பிறக்காதா போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணமாக பொதுமக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

இறுதியில் இந்த மின் நிலையத்தினை நிறுத்தக் கோரி நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். சிவானந்தம் ஆகியோர்களிடத்தில் மகஜரும் கையளிக்கப்பட்டது.

14462842_1271096822923073_8123031907069863754_n

இந்த விடயம் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் : இந்த மின்நிலைய பிரச்சினை தொடர்பாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது, இக் கூட்டத்திபோது இதனை ஆராய ஒரு உயர்மட்டக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மற்றும் இரண்டு வாரங்களில் இது சம்மந்தமான தொழில்நுட்ப அறிக்கைககள் கோரப்பட்டுள்ளன அவை கிடைக்கப்பெற்றதும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.