க.கிஷாந்தன்
தங்களுக்கான சம்பள உயர்வை உடன் வழங்குமாறு வலியுறுத்தியும், கடந்த ஒன்றரை வருடமாக இழுபறி நிலையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் படியும் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் அட்டன் – நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஒப்பாரியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் 30.09.2016 அன்று முற்பகல் 09 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
அட்டன் பிரதேச தொழிலாளர்கள் அட்டன் மல்லியப்பு சந்தியில் அட்டன் – நுவரெலியா பிரதான வீதி மற்றும் அட்டன் கொழும்பு பிரதான வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜதுரையின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
மேலும் கொட்டகலை, பத்தனை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 42 தோட்டங்களில் வசித்து வரும் ஐந்தாயிரம் தொழிலாளர்கள் கொட்டகலை நகரத்தில் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அத்தோடு கொட்டகலை நகரத்தில் சில மணி நேரம் கடைகளையும் அடைத்து போராட்டத்திற்கு ஆதரவும் வழங்கினர்.
1000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறும், ஏமாற்று கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யும்படியும் தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய தோட்டத் தொழிலாளர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, அட்டன் – கொழும்பு புகையிரத பாதையின் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தண்டவாளத்திலும் ஆர்ப்பாட்டக்காரரர்கள் தரித்திருந்ததால் சில மணி நேரம் ரயில் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டது.
இதேவேளை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவந்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.