இவ்வருடம் ஹஜ் ஏற்பாடுகளைச் செய்த ஹஜ் முகவர்கள் பலர் மீது ஹஜ்ஜாஜிகள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் கடந்த வருடம் போன்று முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமெனவும் முஸ்லிம் சமயவிவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகளின் போது முகவர் நிலையங்கள் ஹஜ்ஜாஜிகளுக்கு உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற ஹஜ் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.டப்ளியூ.ஏ.சலாம் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இவ்வருடமும் ஹஜ் முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு அக்குழு நியமிக்கப்படவுள்ளது.
இவ்வருடம் ஹஜ் ஏற்பாடுகளில் மேற்கொண்ட புதிய முறைகள் ஹஜ்ஜாஜிகளின் நலன் கருதியே மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஹஜ் கட்டணங்களிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
மக்கள் குறைந்த கட்டணத்தில் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது எனினும் பல ஹஜ் முகவர்கள் ஹஜ்ஜாஜிகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹஜ் கடமையின் போது நேரடியாகவும் ஹஜ்ஜாஜிகள் முறைப்பாடுகளை முன்வைத்தனர். முறைப்பாடுகள் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையிலான சுயாதீன விசாரணைக்குழு மூலம் விசாரிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே இவ்வருட ஹஜ் கடமையின் போது ஹஜ் முகவர்களால் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஹஜ்ஜாஜிகள் தமது முறைப்பாடுகளை முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சுக்கு எழுத்து மூலம் அனுப்பிவைக்குமாறு வேண்டப்படுகின்றனர் என்றார்.