நவம்பர் மாதம் சார்க் மாநாடு- மோடியின் பாகிஸ்தான் பயணம் ரத்து..?

0-34592100-1450848819-indian-pm-narendra-modi-russia-remains-our-principal-partnerதெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

நவம்பர் 9, 10-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் செய்து வருகிறது. இஸ்லாமபாத்தில் மாநாடு நடக்கும் அரங்கில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன்தான் இந்த தாக்குதல் நடந்ததாக இந்தியா கருதுகிறது. எனவே பாகிஸ்தானுக்கு எத்தகைய பதிலடி கொடுப்பது என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

உரி தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் உறவிலான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. உலக அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபடும் என்று தெரிய வந்துள்ளது.

பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தானுக்கு பாதிப்பை ஏற்படுத்த இந்தியா தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் மாதம் நடைபெற உள்ள சார்க் மாநாடு பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

ஆனால் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது.