சுஐப் எம் காசிம்
வடக்கு முஸ்லிம்கள் கடந்த காலங்களில் தமக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து தமது தாயகத்தில் மீளக்குடியேறி வாழத்தலைப்படும் போது இனவாத சிந்தனையுள்ள அரசியல்வாதிகள் அதனைக்குழப்பி மீண்டும் துளிர் விடுகின்ற தமிழ்,முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் இதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை தக்கவைப்பதே அவர்களின் உள்நோக்கமாகும் என்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறினார்
மன்னார் உப்புக்குளத்தில் அல்பதாஹ் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹஜ் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்ற அமைச்சர் றிஸாட் பதியுதீன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கினார் இந்த விழாவில் விசேட அதிதியாக வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரனும் பங்கேற்று உரையாற்றினார்.
அமைச்சர் றிஷாட் இங்கு உரையாற்றிய போது கூறியதாவது,
மன்னார் மாவட்டம் இந்து,கிறிஸ்தவ முஸ்லிம் மக்கள் அந்நியோன்யமாக இணைந்து வாழ்ந்த பூமி எனினும் முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியதனால் இன உறவு சீர்குலைந்தது சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை பாழாகிப் போனது தென்னிலங்கையில் 24 ஆண்டு காலம் அகதி வாழ்வில் சீரழிந்துவிட்டு மீண்டும் நாங்கள் சொந்தப்பூமியில் வாழ எத்தனிக்கும் போது ஒரு சில இனவாதிகள் அதற்கு தடை போடுகின்றனர் எங்களை ”வந்தான் வரத்தான்களாக” எண்ணி கதை கூறுகின்றனர் எமது குடியேற்றத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி தங்களின் அரசியல் இருப்பை பாதுகாப்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கின்றது.
மன்னாரில் புதிதாக முளைத்த அரசியல்வாதி ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் எனக்கு எதிராகவும் வேண்டும் என்றே தொடர்ந்தும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றார் கடந்த வடமாகாணசபை தேர்தல் காலத்திலும் தாங்கள் வெற்றி பெற்றால் றிஸாட்டை மதவாச்சிக்கு இந்தப்பக்கம் வரவிடமாட்டோம் என்று கூறித்திரிந்தவர் இவர்.
இவ்வாறானவர்களுக்கு மத்தியிலும் வடமாகாணத்திலே தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பாலமாகவும் சிறந்த எடுத்துக் காட்டாகவும் திகழ்பவர் மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரன் அவர்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் நான் கூறுகின்றேன்.
அவர் தனது பணிகளை இன மத பேதம் அற்ற முறையில் மேற்கொள்கின்றார் ஒரு சிறந்த அரசியல்வாதிக்கு இருக்கவேண்டிய அத்தனை பண்புகளையும் இலட்சணங்களையும் கொண்டுள்ள டெனிஸ்வரன் போன்றோர்கள் அரசியலில் இருக்கும் வரை முஸ்லிம் சமூகத்துக்கு எத்தகைய அநீதிகளும் இடம்பெறுவதற்கு அனுமதிக்கமாட்டர் என நான் உறுதியாக நம்புகின்றேன் இவ்வாறான சகோதர இன அரசியல்வாதிகளை நாங்கள் இனங்கண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே காலத்தின் தேவையாகும்.
மன்னார் மாவட்டத்தில் உப்புக்குளம், மன்னார் நகருடன் நெருங்கிய கிராமம் உப்புக்குளத்தின் அயற்கிராமங்களில் வாழும் கிறிஸ்தவ இந்து மக்களுடன் வெள்ளியேற்றத்துக்கு முன்னர் நீங்கள் அன்பாக வாழ்ந்தது போல் இப்போதும் அதே உறவுடன் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காக உங்களுக்கிடையேயும் ஏனை இனங்களுக்கிடையேயும் பிளவுகளை ஏற்படுத்தவேண்டாம் என அன்பாக வேண்டுகிறேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.