‘யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்க முடியும்’ என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதைபடிவங்களில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. அவை வாகனங்கள் மற்றும் விமானம் போன்றவற்றை இயக்க பயன்படுத்தப்படுகிறது.
வாகனங்கள் இயக்கப்படும் போது அதிக அளவில் கார்பன் வெளியாகிறது. இதனால் காற்று மூலம் ஏற்படும் பெரும்பாலான மாசுவுக்கு இது காரணமாக உள்ளது.
தற்போது பெட்ரோல் தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாற்று எரிபொருள் தயாரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் யூகலிப்டஸ் மரத்தில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன.
இதன் மூலம் விமானத்துக்கு பயன்படுத்தப்படும் உயர்ரக பெட்ரோல் தயாரிக்க முடியும் என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கார்ஸ்டென் குல்கெய்ம் கண்டுபிடித்துள்ளார்.
உலகம் முழுவதும் 2 கோடி ஹெக்டேரில் யூகலிப்டஸ் மரம் வளர்க்கப்படுகிறது. அவை மரக்கூழ் மற்றும் காகிதம் தயாரிக்கவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவே ஆயில் தயாரிக்கப்படுகிறது.
யூகலிப்டஸ் மரத்தில் இருந்து ‘மோனோ டெர்பென்ஸ்’ என்ற மூலப் பொருள் கிடைக்கிறது. அவற்றை அதிசக்தி வாய்ந்த விமான பெட்ரோல் ஆக மாற்ற முடியும். இவற்றின் மூலம் உலக அளவில் 5 சதவீத விமான சேவைக்கான பெட்ரோலை தயாரிக்க முடியும்.
புதை படிவம் மூலம் கிடைக்கும் பெட்ரோலை விட குறைந்த அளவே கார்பன் வெளியாகும். ஆனால் இதை தயாரிக்க கூடுதல் செலவாகும். விமானம் மட்டுமின்றி திறன் வாய்ந்த ஏவுகணைகளையும் இயக்க முடியும் என குல்கெய்ம் கூறியுள்ளார்.