புதிய அரசியலமைப்புச் சட்ட கலந்துரையாடலில் இருந்து ஒதுங்கியிருக்க ஜேவிபி தீர்மானம்

முன்வைக்கப்பட உள்ள உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒற்றையாட்சியா அல்லது சமஷ்டியா என்ற கலந்துரையாடலில் இருந்து ஒதுங்கியிருக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்காக போராடுவது மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் எண்ணக்கருவாக இருந்தாலும் அந்த முன்னணி தற்போதை தலைவர்களது நடத்தை முன்னணியின் உறுப்பினர்களுக்கு பாரதூரமான பிரச்சினையாக உள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடாது இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி, அது குறித்து அமைதியான நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் சில இனவாத சிங்கள அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும், சில சிங்கள ஊடகங்களும் சமஷ்டி என்ற வார்த்தையை பிரிவினைவாத வார்த்தையாக சித்தரித்து வருகின்றன.

உலகில் உள்ள இலங்கையை விட பல சிறிய நாடுகள் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை கொண்டுள்ள நிலையில், இலங்கையில் உள்ள இனவாத போக்குடைய அரசியல்வாதிகள் சமஷ்டி என்ற வார்த்தை பயன்படுத்தி இனவாத்தை தூண்டி வருவதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.