காவிரிப் பிரச்சினை – கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடக மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, இந்திய உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்காமல், வன்முறையில் இறங்கியமை சட்டவிரோதமென்றும் பொதுச் சொத்துக்களை தீவைத்து எரித்தமை கண்டனத்துக்குரியது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

 

 கர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் தமிழகத்துக்கு வரும் 15,000 கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு, கடந்த 12ஆம் திகதி, கர்நாடக அரசினால் மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, அந்த மனுத் தொடர்பில் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம், எதிர்வரும் 20ஆம் திகதி வரை, தினமும் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையொட்டி, பெரும் கலவரங்கள் வெடித்தன. இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக மாநிலம் முழுவதும், போராட்டங்களும் வன்முறைக் கலவரங்களும் நிலவின.

 

 இதில், தனியாருக்குச் சொந்தமான பஸ்களும் எரிக்கப்பட்டன. தமிழகப் பதிவெண் கொண்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு, கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவும், பகலும் தொடர்ந்து பணியாற்றினர். கர்நாடக மாநிலத்தில் நூற்றுக்கணக்கான பஸ்களும் வணிக நிறுவனங்களும் தாக்கப்பட்டன. இதனால், இந்திய ரூபாய்ப்படி 25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, தமிழகத்திலும் சில இடங்களில் நடைபெற்ற சில சம்பவங்களால், பதற்றம் நிலவியது.

 

 இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், காவிரிப் பிரச்சினையில், கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்காமல், வன்முறையில் இறங்கியது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது. பொது சொத்துக்களை தீவைத்து எரித்தது கண்டனத்துக்குரியது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 இரு மாநிலங்களிலும் பந்த் உள்ளிட்ட எந்தப் போராட்டமும் நடக்கக் கூடாது. இவை நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய புனிதமான கடமை, மாநில அரசுகளுக்கு உண்டு. ஆயுதங்களைக் கொண்டு தாக்கக்கூடாது. தீவைத்தல் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.