இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஷிகார் தவான். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரரான அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார். முதல் டெஸ்டில் 84 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு நடந்த டெஸ்ட்களில் ஏமாற்றம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து கடைசி டெஸ்டுக்கான அணியில் இருந்து தவான் நீக்கப்பட்டார். ராகுல் சிறப்பாக விளையாடுவதால் தொடக்க வீரர் வரிசையில் போட்டி நிலவுகிறது. முரளி விஜய், தவான், ராகுல் ஆகிய 3 வீரர்களும் தொடக்க வரிசையில் உள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற கடும் போட்டி நிலவுகிறது என்று தவான் கூறியுள்ளார். துலீப் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடிய அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
தொடக்க வீரர்கள் வரிசைக்கு 3 வீரர்கள் இருப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதில் தவறு இல்லை. உண்மையிலேயே இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதாகும். கடும் போட்டி நிலவுகிறது. அதுவும் ஆரோக்கியமானதே. ஆரோக்கியமான போட்டி இருப்பது கிரிக்கெட்டுக்கு நல்லது.
சமீபகாலமாக ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். டெஸ்டில் மட்டுமல்ல 20 ஓவர் போட்டியிலும் அவர் நேர்த்தியுடன் விளையாடுகிறார்.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் என்னை நீக்கியது உண்மையிலேயே வருத்தத்தை அளித்தது. அணியில் இருந்து நீக்கப்படும்போது எப்போதுமே ஏமாற்றத்தை அளிக்கும்.
ஆனால் அணிக்கு மீண்டும் திரும்ப உத்வேகத்தை ஏற்படுத்தும். 20 ஓவர் அணியில் இருந்து என்னை நீக்கியபோது மிகுந்த ஆதங்கம் அடைந்தேன். அதே நேரத்தில் மிகப்பெரிய உந்துதலை பெற்று அணிக்கு திரும்பினேன்.
இவ்வாறு அவர் தவான் கூறியுள்ளார்.