தைவான் – சீனாவை கடும் புயல் தாக்கியது: 10 சரக்கு கப்பல்களின் நங்கூரம் துண்டிப்பு ( வீடியோ )

தைவான் மற்றும் சீனாவை கடும் புயல் தாக்கியதையடுத்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 சரக்கு கப்பல்களின் நங்கூரம் துண்டிக்கப்பட்டதால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

தென்சீன கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த புயல் இன்று அதிகாலை தைவான் மற்றும் சீனாவில் உள்ள சியாமன் பகுதியை தாக்கியது. அதிசக்திவாய்ந்த இந்த சூப்பர் புயலுக்கு மெராந்தி என்று பெயரிடப்பட்டு இருந்தது.

இந்த புயல் தாக்கியபோது அதிகாலையில் மணிக்கு 227 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசியது. இதனால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளின் கூரைகளும் பரந்தன.

தைவானில் மின்சாரம் இல்லாமல் 5 லட்சம் பேர் தவிக்கின்றனர். சீனாவிலும் அதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

கோசியங் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 சரக்கு கப்பல்கள் நங்கூரம் அறுந்து புயல் இழுத்து சென்றது. அதில் 140,000 டன் கண்டெய்னர்கள் கொண்ட ஒரு கப்பல் இரண்டு கிரேன்கள் மீது பலமாக மோதின. இதுதவிர மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஏராளமான சிறு படகுகள் மூழ்கி விட்டன. கடற்கரை ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர்கள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டன.

கடந்த 22 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புயல் தாக்குதல் அதிகமாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தைவான் நாட்டில் ஒருவர் இறந்துள்ளார். உயிர் இழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இரு நாடுகளிலும் பல லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதுவரை 800 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.