புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் இந்தியாவில் கைது

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஏ. அருள் ஜயரட்ணம் (41) என்ற பெயருடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று கைது செய்யப்பட்ட இவர் இராமேஸ்வரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சட்டத்திற்கு மாறான முறையில் இந்தியாவிற்குள் பிரவேசித்த குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்கள் மற்றும் சிறுவர்களின் ஆடைகள் என்பனவும் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளன. 

குறித்த நபர் 1996 – 1998 ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவில் இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

மன்னாரில் இருந்து அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், இந்தியாவின் முத்துப்பேட்டை பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியுடன் வாழ்வதற்காக இவ்வாறு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

முல்லைத்தீவைச் சேர்ந்த குறித்த நபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இலங்கையில் விட்டுச் சென்றுள்ளதுடன், பின்னர் அவர்களையும் இந்தியாவிற்கு வரவழைத்துக் கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.