மஹிந்தவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்சவுக்கு வந்த சோதனை

rohitha rajapakse

 கடந்த ஆட்சியின் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமையால் விசாரணைகள், சிறைச்சாலை என ராஜபக்ஷ குடும்பம்  சிக்கி தவித்து வருகிறது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

எனினும் மஹிந்தவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ இதுவரை எந்தவிதமான குற்றச்சாட்டுகளிலும் சிக்கியிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் காணி கொள்வனவு ஒன்றில் ரோஹித தொடர்புபட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ள நிதி மோசடி விசாரணை பிரிவு தயாராகி வருகிறது.

இரத்மலானையில் அமைந்துள்ள Asian Cotton Mills Ltd இன் பகுதி ஒன்றை Excel Property Development நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.

இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்சவுக்காக வீடு ஒன்று நிர்மாணிப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதா என ஆராய்வதற்கு நிதி மோசடி விசாரணை பிரிவு ஆயத்தமாகியுள்ளது.

29 பேர்ச் அளவிலான காணித் துண்டொன்றை Excel Property Development நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.

இவ்வளவு பெரிய காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டம் தயாரித்தல் மற்றும் அதற்கு அனுமதி பெற்றுக்கொள்வதற்கு தெஹிவளை கல்கிசை மாநகர சபையில் அனுமதி பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையே இந்த சந்தேகத்திற்கு காரணமாகியுள்ளது.

எப்படியிருப்பினும் Excel Property Development நிறுவனம் குறித்த இடத்தை கொள்வனவு செய்வதற்கு பான் ஏசியா வங்கியில் 175 மில்லியன் ரூபா கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த கொள்வனவு 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பான் ஏசியா வங்கியில் பெற்றுக் கொண்ட கடனை மீளவும் செலுத்தாதன் காரணமாக அந்த காணியை பான் ஏசியா வங்கியினால் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Excel Property Development நிறுவனம், ராஜபக்ஷ குடும்பத்தின்  மிகவும் நெருக்கமான சகாவான சஜின் வாஸ் குணவர்தனவின் மனைவியான டியானா குணவர்த்தனவினது என்பது குறிப்பிடத்தக்கது.