ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அமைய செயற்படுவதாகவும், தாமே உண்மையான பண்டார நாயக்கவின் கொள்கைகளுடன் செயற்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
டார்லி வீதியில் கார்ட் போட் மட்டைகளால் அமைக்கப்பட்ட கட்டத்தில் பதவி கிடைத்தவுடன் ஒரு சிலர் மற்றவர்களை வெட்டிவிடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய அரசியலமைப்பு மூலம் இன்று நாடு துண்டாடப்படவுள்ளதாகவும், 29,000 இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்து மீட்டெடுத்த நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தான் பதவியில் இருந்த போது இலங்கை வந்து பான் கீ மூன் எதுவுமே பேசாது சென்றார். ஆனால் இன்று வாய் திறந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.
நாடு, இனம், மதம் பற்றி அனைவரும் பெருமிதமாக பேசுவதற்கு இடம் இருக்கின்ற போதும், இன்று இனம் பற்றி ஏதாவது பேசினால் இனவாதியாக சித்தரிக்கப்படுவதாகவும், இதை பார்த்து சில புத்திசாலிகளும் அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று வெளிநாட்டவர்கள் எம்மை வழி நடாத்துவதாகவும், அத்தகைய நாடுகள் தொடர்பில் தாம் நன்கு அறிந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இவ்வாறான ஒரு சூழலில் யுத்த குற்றங்களை கண்டறிவதற்கு சர்வதேச நீதிமன்றம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.