ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கண்டி மகாநாட்டின் பின்னரும் கட்சிக்குள் கட்புலனாகாத நிலையில் அரசியல் வைரஸ் களையெடுப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது போல் தெரிகிறது. குறித்த மாகாநாட்டில் கட்சியின் செயலாளரான ஹஸன் அலியின் அதிகாரக் குறைப்பு பகிரங்கமாக இடம்பெற்றிருந்த நிலையிலேயே இந்தக் களையெடுப்புகள் தொடர்கின்றன.
கண்டி மகாநாட்டின் பின்னர் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமான கல்முனையின் முன்னாள் மேயர் நிஸாம் காரியப்பரின் நிலைமையை நோக்கும்போது கவலை தருகிறது. கடந்த காலங்களில் முக்கிய கூட்டங்கள், இராஜதந்திரிகளுடான சந்திப்பு, கட்சி உயர்மட்ட மந்திராலோசனைகள், இரகசிய சந்திப்புகள் போன்ற விடயங்களில் நிஸாம் காரியப்பர் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இவை தொடர்பில் அவருக்கு அழைப்புகள் அனுப்பப்படும். அவரும் எங்கிருந்தாலும் கொழும்புக்கு வந்து இவைகளில் கலந்து கொண்டிருந்தார். ஆனால், கண்டி மகாநாட்டின் பின்னரோ அவரது முக்கியத்துவம் கட்புலனாகாத நிலையில் குறைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது. ஊடகங்களில் கடந்த காலங்களில் அடிபட்ட அவரது பெயர், படங்கள் இன்று மங்கிப் போயுள்ளது. எதுவுமே சும்மா ஆகி விடாது..ஏதாவது நடந்துதானே இருக்க வேண்டும்.
நிஸாம் காரியப்பர் தொடர்பில் சில விடயங்களில் நான் அவருடன் உடன்பாடு கொண்டவன் அல்ல.. ஆனால், சில உண்மைகளை மறைக்கவும் முடியாது அல்லவா? மர்ஹும் அஷ்ரஃப் காலத்திலிருந்தே கட்சியில் தன்னை இணைத்து அதற்காக பாடுபட்ட ஒருவர்தான் இந்த நிஸாம் காரியப்பர். பல தியாகங்களை அவர் செய்தவர். சிரேஷ்ட, பிரபலமான, வாத திறன்மிக்க சட்டத்தரணியான அவர் கட்சிக்காக தனது தனிப்பட்ட இலாபம், நலன்களை இழந்த ஒருவர். கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் என்ற பதவியையே இன்று வரை வகிக்கும் அவர் தனக்கு உயர் பதவி வேண்டுமென்றோ அல்லது அரச நிறுவனம் ஒன்றின் தலைமைப் பதவியை (சிறிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது) தர வேண்டுமென்றோ அடம்பிடிக்காத ஒருவராகவே திகழ்கிறார்.
கல்முனை மேயர் யார் என்ற சர்ச்சையின் போது முதலில் சிராஜ் மீராசாகிபுக்கு சுழற்சி முறையில் விட்டுக் கொடுத்தவர். மிகவும் பொறுமைசாலி மோசடி, துஷ்பிரயோகம் என்ற விமர்சனங்களை உள்வாங்காத ஒருவர். கட்சியை முதலிலும் தலைமையை இரண்டாவதாகவும் நேசிப்பவரே இந்த நிஸாம் காரியப்பர்.
அமைச்சர் அஷரப்ஃ தனது உறவுக்காரன் என்பதற்காக அவர் கட்சியில் சேரவில்லை. அதே போன்று நிஸாம் காரியப்பர் தனது உறவுக்காரன். இவனுக்கு ஏதாவது பொறுப்பான பதவிகளை கொடுத்தால் ஊர் பழி சொல்லும் என்ற வெட்கத்தினால் மறைந்த மாமனிதரும் இவருக்கு எந்தப் பெரிய பதவிகளையும் வழங்காது அரசியல் நாகரீகத்தைப் பேணி நின்றார்.
இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கடைக்கண்ணாலும் இப்போது பார்க்காமல் இருப்பது ஏனோ? மோசடிக்காரன், துஷ்பிரயோகம் செய்பவன்,பிழைப்பாளி,பந்தம் பிடிப்பவன் போன்ற முக்கியமான அரசியல் தகுதிகள் நிஸாம் காரியப்பரிடம் இல்லாமையே இந்தப் பின்னடைவுக்கான காரணங்களோ தெரியாது. இறைவனுக்கே வெளிச்சம். அல்லது மர்ஹும் அஷ்ரஃப் அவர்களின் இரட்டை வழி உறவுக்காரன் என்பதும் அவரது தகுதியீனத்துக்கு காரணமாக அமைந்து விட்டதோ தெரியாது.
கட்சிக்காக உண்மையாக உழைத்து, தன்னையே இழந்து இன்று வயது வயோதிப பராயத்தை அடைந்துள்ள எனது தம்பி நிஸாமுக்கும் எம்.பி பதவியை சுழற்சி முறையில் கொடுத்திருக்கலாம் அல்லவா? நாடாளுமன்ற உறுப்பினர் ஸல்மான போன்று கட்சிக்காகவே தன்னை அன்று முதல் இன்று வரை தியாகம் செய்த ஒருவர் நிஸாம். அதேவேளை, ஸல்மானிடம் காணப்படும் அனைத்து தகுதிகளுடன் வேறு பல நல்ல சிறப்பம்சங்களையும் கொண்ட நிஸாம் காரியப்பருக்கு ஆகக் குறைந்தது 2 வருடங்களுக்காவது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியிருக்கலாம் அல்லவா? நீங்கள் நினைக்கலாம் நிஸாம் காரியப்பர் எனது தம்பி என்பதால் இவ்வாறு கூறுகிறேன் என்று. தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது உண்மைதான். அப்படித்தான் பல விடயங்களும் தப்புத் தப்பாக நடந்தன. நடக்கின்றனவே. ஆனால்,நான் எனது தம்பி என்பதற்காக எதனையும் இங்கு கூறவில்லை.
எனது நெஞ்சுக்கு நெருங்கிய 40 வருடகால நண்பரான மன்சூர் அவர்களை கண்டி மகாநாட்டின் போது அதிகாரமிக்க கட்சியின் அதி உயர்பீட செயலாளர் நாயகமாக நியமித்ததில் தப்பே இல்லை. அத்தனை தகுதியும் அவருக்கு உண்டு. ஆனால், அதன் போது நிஸாம் காரியப்பரையும் சற்று யோசித்திருக்க வேண்டுமல்லவா? இவர்களில் ஒருவரை பெரும்பான்மை ஆதரவின் மூலம் அந்தப் பதவிக்கு தெரிவு செய்திருக்க முடியும்தானே?
முஸ்லிம் காங்கிரஸில் இப்போதுள்ளவர்களில் அனைத்து தகுதியையும் கொண்டவர் நிஸாம் காரியப்பர்தான். தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அடுத்த இடத்தில் அவரை வைத்து பார்ப்பதிலும் என்ன தப்பு வந்து விடும்?சிலவேளைகளில் இப்படிப்பட்ட ஒருவரை முக்கிய அதிகாரத்தில் வைத்தால் தங்களது இருப்பு கேள்விக்குறியாகி விடும் என யாரேனும் நினைத்தார்களோ தெரியாது. (கிழக்கில் தலைமை வந்தால் பிரச்சினையாகிவிடும் என்ற அச்சமும் இருக்கலாம்)
இப்போது சாட்டுக்காக சில விடயங்களை நிஸாமிடம் கொடுத்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை. நிஸாம் காரியப்பரை தேசிய அரசியலுக்கு கொண்டு வருவதால் முகங்கொடுக்கக் கூடிய பல சவால்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக உள்ளுர் அரசியலுடன் (உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகளுடன்) அவரை மட்டுப்படுத்தி, ஓரங்கட்டி வைக்கும் இலக்கோ தெரியாது.
அண்மையில் நண்பர் ஒருவரிடம் நிஸாம் காரியப்பர் இவ்வாறு தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. அதாவது ”நான் ஒதுங்குவதற்கு முன்னரே அவர்கள் என்னை ஒதுக்கி விடுவார்கள்” என வேதனைப்பட்டு சகூறியதாக எனக்கு ஒரு தகவல் கிடைத்தது.
ஆக மொத்தத்தில், நிஸாம் காரியப்பர் மட்டுமல்ல.. பல திறமைசாலிகள், கட்சிக்கு விசுமானவர்கள், நேர்மைமிக்க செயற்றிறன் கொண்ட பலரும் இன்று தங்களைப் பாதிக்கும் வைரஸாக சிலரால் கருதப்பட்டு அநியாயமாகக் களை எடுக்கப்பட்டால் இறுதியில் கட்சியின் நிலைமைதான் என்ன ஆகும்.? சுளகில் அரிசியைப் போட்டு புடைக்கும் போது அரிசிதான் மிஞ்ச வேண்டுமே தவிர கற்களும் பதறுகளும் சுளகில் மிஞ்சக் கூடாது என்பதனை கட்சியின் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்
இது இவ்வாறிருக்க, கட்சியை விட தலைமையை அதிகம் நேசிப்பவர்களுக்கே அதிர்ஷ்டலாபச் சீட்டு பரிசு என்றால், கட்சியின் இன்னொரு முக்கியஸ்தரான யஹியாகான் அவர்கள் ”எனக்கு ஹக்கீமே தலைவர். அவர்தான் என்னிடம் முதலிடம். இரண்டாவதுதான் கட்சி. ஹக்கீம் ஜயவேவே.. என்று பகலில் கதறியும் இரவில் கனவு கண்டு பதறியும் எழுகிறாரே.. இப்படிப்பட யஹியாகானுக்கு என்ன பொறுப்பான பதவிதான் கொடுக்கப்படப் போகிறதோ தெரியாது. இருப்பினும் யஹியாகானுக்கு எனது அட்வான்ஸ் அனுதாபங்கள்.. இலவம் மரத்தை நம்பி ஏமாந்த கிளியின் கதையாவதற்கு.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அங்கசுத்தி இஞ்சசுத்தி மூக்கத்தொட்ட கதபோலிரிக்கி
ஒங்கட கொத்துவா