தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கனிமொழி எம்.பி., தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர்.
அப்போது கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சனையில் தீர்வு காண மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றுதான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அப்படிப்பட்ட நிலை தமிழகத்தில் உள்ளது.
காவிரி பிரச்சனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். இதற்காக தி.மு.க. தொடர்ந்து போராடும் என்றார்.
துரைமுருகன் கூறும் போது, காவிரி பிரச்சனையில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.