மரண தண்டனையிலிருந்து தப்பிக்க உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ள துமிந்த

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதியன்று பிற்பகல் வேளையில் அங்கொடை, ஹிம்புட்டான ஒழுங்கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ‘ட்ரயல் அட் பார்’ அமர்வில் ஷிரான் குணரத்ன தலைமையில் பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ்.மொராயஸ் ஆகிய நீதிபதிகள் உள்ளடங்கிய குழுவே இந்த தீர்ப்பை நேற்று முன்தினம் அறிவித்தது. 

வழக்கின் முதல் பிரதிவாதியான பொலிஸ் உத்தியோகத்தர் அனுர டி மெல், மூன்றாவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜயநாத், 7வது பிரதிவாதியான சரத் பண்டார, 10வது பிரதிவாதியான காணாமல் போயுள்ள ஜனக கலகொட மற்றும் 11வது பிரதிவாதியான துமிந்த சில்வா ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இவர்களை ஜனாதிபதி நிர்ணயம் செய்யும் திகதி மற்றும் நேரத்தில் வெலிக்கடை சிறைச்சாலையின் நான்கு சுவர்களுக்குள் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அனுர டி மெல், சந்தன ஜகத் குமார, சமிந்த ரவி ஜயநாத், லங்கா ரசாஞ்சன, மாலக சமீர, விதானகமகே அமில, சரத் பண்டார, சுரங்க பிரேமலால், சமிந்த சமன் குமார, ஜனக கலகொட, துமிந்த சில்வா, ரோஹன மாரசிங்க, நாகொட ஆரச்சிகே சமிந்த ஆகிய 13 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபரால் பெயரிடப்பட்டிருந்தனர். 

2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி அங்கொடை, ராஹுல வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்துக்குள் அத்துமீறி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியமை, நிவங்கா மதுஷானி பத்திரன என்பவரை தூற்றி அச்சுறுத்தியமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் அங்கொடை, ராஹுல வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த தமித் சுரங்க குமாரவின் மார்பு பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை வைத்து அச்சுறுத்தியமை அங்கொடை, ஹிம்புட்டான ஒழுங்கையில் வைத்து சட்ட விரோத குழுவொன்றின் அங்கத்தவராக இருந்து பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர, ஜலாப்தீன் மொஹம்மட் அசீம், மணிவேல் குமாரசுவாமி, தமித் தர்ஷன ஜயதிலக ஆகியோரை படுகொலை செய்தமை, ராஜதுரகே காமினி என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து படுகாயம் ஏற்படுத்தியமை, அந் நடவடிக்கைகளுக்கு உதவி, ஒத்தாசை புரிந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் மேற்படி பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. 

தண்டனை சட்டக் கோவையின் 146வது அத்தியாயத்துடன் இணைத்து கூறப்படும் 146, 486, 296 ஆகிய அத்தியாயங்களின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 32வது அத்தியாயத்துடன் இணைத்து கூறப்படும் 144, 296 மற்றும் 486 ஆகிய அத்தியாயங்களின் கீழும் பிரதிவாதிகளால் குற்றம் புரியப்பட்டுள்ளதாக இதன் போது சட்ட மா அதிபரால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. 

இது தொடர்பிலான சிறப்பு ட்ரயல் அட்பார் விசாரணைகள் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் 12ம் திகதி முதல் ஆரம்பமாகின. 

மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஷிரான் குணரத்ன(தலைவர்), பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ்.மொராயஸ் ஆகிய மூவர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் ஊடாக வழக்கானது மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையிலேயே இடம்பெற்றது. 

குறித்த தினத்தில் இருந்து 52 நாட்கள் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்றன. இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் 42 சாட்சியாளர்கள் மன்றில் சாட்சியமளித்தனர். இதனைவிட 86 வழக்குப் பொருட்களும் 126 ஆவணங்களும் பரீட்சிக்கப்பட்டன. 

இதனையடுத்து பிரதிவாதிகளின் தரப்பில் சாட்சிய ங்கள் முன்வைக்கப்பட்டன. 3வது பிரதிவாதி சார்பில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இருவரும் 11வது பிரதிவாதி சார்பில் துமிந்த சில்வாவின் தந்தையும் சாட்சியமளித்தனர்.

முறைப்பாட்டாளர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஷித் முதலிகேயின் வேண்டுகோளுக்கு இணங்க அதன் பின்னர் சம்பவ இடத்தையும் மேற்பார்வை செய்தனர். 

இந்நிலையில் கடந்த ஜூலை 14ம் திகதி விசாரணைகள் நிறைவுற்று நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது

இது தொடர்பில் திருப்தியடைய முடியாதெனவும், அதற்கமைய மேன்முறையீட்டை தாக்கல் செய்யுமாறு குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரத லக்ஷ்தன் கொலை தொடர்பிலான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினால் விசாரிக்கப்பட்டது.

அதற்கமைய அதன் மேன்முறையீட்டினை உச்ச நீதிமன்றிலே தாக்கல் செய்ய முடியும் என வழக்கறிஞர் யூ.ஆர்.சில்வா குறிப்பிட்டுள்ளார்.