ஒற்றுமையை நிலை நாட்டும் உலக மாநாடு

இஸ்லாம் என்பது ஐந்து தூண்களின் மீது எழுப்பப்பட்டுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துரைக்கிறார்கள்:

hajj-macca

‘இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது (அதன் கூடாரம்) அமைக்கப்பட்டிருக்கிறது. அவை: 1. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், அவனின் திருத்தூதராகவும் இருக்கிறார்கள் என சாட்சியம் கூறுவது. 2. தொழுகையை தவறாமல் தொழுது வருவது. 3. புனித ரமலானில் நோன்பு நோற்பது. 4. கடமையான ஜகாத்தைக் கொடுத்து வருவது. 5. ஹஜ் செய்வது,

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி, முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட இஸ்லாமிய அடிப்படையான ஐந்து கடமைகளும், ஐந்துவிதமான தத்துவங்களை எடுத்துரைக்கிறது. அந்த தத்துவங்கள் வருமாறு:-

‘கலிமா’: ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ எனும் உயர்ந்த இறை கோட்பாட்டை நினைவு கூர்கிறது.

‘தொழுகை’: ஆடம்பர வாழ்க்கையின் ஆதாரத்தைத் தேடுவதில் இருந்து ஆன்மாவைக் கட்டுப்படுத்தாத வரை தொழுகையை நிறைவு செய்ய முடியாது. தொழுகை ஆன்மாக் கட்டுப்பாட்டை நினைவு கூர்கிறது.

‘ஜகாத்’: சேமித்து வைத்துள்ள பொருளின் மீதுள்ள பற்றைத் துறக்காத வரை ஜகாத்தை நிறைவேற்ற முடியாது. ‘ஜகாத்’ என்பது பணப்பற்றை துறப்பதை நினைவு கூர்கிறது.

‘நோன்பு’: மனோ இச்சைகளைக் கட்டுப்படுத்தாத வரை நோன்பை நோற்க முடியாது. நோன்பு மனக்கட்டுப்பாட்டை நினைவு கூர்கிறது.

‘ஹஜ்’: வீடு, வாசல், மனைவி, மக்கள், நிலபுலன்கள் போன்றவற்றின் ஆசைகளை அடக்கிக் கொள்ளாத வரை ஹஜ்ஜை பூர்த்தி செய்ய முடியாது. ‘ஹஜ்’ என்பது அனைத்துவிதமான ஆசைகளையும் துறந்து விடும் தியாகத்தை நினைவு கூர்கிறது.

இஸ்லாமிய ஐந்து கடமைகளும் ஐந்துவிதமான அம்சங்களை எடுத்துரைத்தாலும் அடிப்படை அம்சமாக உள்ள ‘ஒற்றுமை’யை இதில் வலியுறுத்துகிறது.

‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுவதன் மூலம் அனைத்து முஸ்லிம்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுகிறார்கள். ‘அல்லாஹ் தான் ஒரே இறைவன்; நாம் அனைவரும் அவனது அடிமைகள்’ என்ற வார்த்தை இனவாதம், நிறவாதம், மொழிவாதம், சாதிவாதம், மதவாதம் போன்ற அனைத்து வெறிகளையும் தவிடு பொடியாக்கி தகர்த்து விடுகிறது.

தொழுகை என்பது அந்தந்த ஊரில் வசிக்கும் மக்களை ஐந்து வேளை ஒன்று திரட்டி, ஒரே அணியாக நிற்பதற்கு பயிற்சி கொடுத்து ஒற்றுமையை மென்மேலும் ஓங்கச் செய்கிறது. தொழுகைக்காக அணி வகுத்து வரிசையாக நிற்கும்போது வெள்ளைத் தோலும், கருப்புத் தோலும், முதலாளியின் காலும், தொழிலாளியின் காலும் ஒன்று சேர்கிறது. ஏழையின் தோளும், பணக்காரரின் தோளும் ஒன்றுபடுகிறது.

“நீங்கள் உங்களின் தொழுகையின் வரிசைகளை சரி சமமாகச் சீர்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் விரோதத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தி விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்காவில் ஹஜ்ஜுக்காக ஒன்று கூடும்போது, புனித ஹரமும், அரபா மைதானமும், முஸ்தலிபா எனும் திடலும், மினா எனும் பரந்த கூடாரங்களும் அனைத்து நாட்டவரையும், அனைத்து நிறத்தவரையும், அனைத்து மொழியினரையும் ஒன்று திரட்டி உலக மகா ஒற்றுமையை ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் ஏற்படுத்தி பிரமிக்க வைக்கிறது. இத்தகைய ஒற்றுமையைத்தான் முஸ்லிம்களையும் தாண்டி அகில உலக மக்களிடமும் இஸ்லாம் எதிர்நோக்குகிறது.

“நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். மேலும் நானே உங்கள் இறைவன்; ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்கிறது திருக்குர்ஆன். (21:92)

“படைப்பினங்கள் அனைத்தும் இறைவனின் குடும்பம் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

கலிமாவில் இருந்து ஹஜ் வரைக்கும் ஊர் ஒற்றுமையில் இருந்து உலக ஒற்றுமை வரைக்கும் போதிக்கிறது. இஸ்லாம் கூறும் ஒற்றுமை என்பது ஒரு மதம் சார்ந்த ஒற்றுமை இல்லை. அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு வாழும் ஒற்றுமையைத்தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

இதையே திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு கூறுகிறது:

“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவில் இருந்து படைத்தான். அவரில் இருந்து அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரில் இருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்” (4:1).

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணில் இருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறியும் பொருட்டு பின்னர் உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் மிகவும் பயபக்தியாளராக உள்ளாரோ அவர்தாம் அல்லாஹ்விடம் மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன். மிகத் தெரிந்தவன்” (49:13).

“நீங்கள் ஒருவருக்கொருவர் உறவை முறித்துக் கொள்ள வேண்டாம்; ஒருவருக்கொருவர் முதுகைத் திருப்பிக் கொள்ள வேண்டாம்; ஒருவருக்கொருவர் குரோதம் கொள்ள வேண்டாம்; ஒருவருக்கொருவர் பொறாமைப்பட வேண்டாம். அல்லாஹ்வின் அடியார் களாகிய நீங்கள் சகோதரர்களாக ஆகி விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், “ஒரு முஸ்லிம் தமது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது அவருக்கு ஆகுமாகாது” என்றும் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) அவர்கள்)

மனிதனுக்கு பலமே ஒற்றுமைதான். ஒன்றுபட்டால் நன்றாக வாழலாம். ஒற்றுமை சீர் குலைந்தால் நிம்மதியாக வாழ முடியாது. உலகம் என்பது வாழ்க்கை களம். இது வாழ்வதற்கு, வீழ்வதற்கு அல்ல. வாழ்வதற்கு வழி ஒற்றுமையில் உள்ளது. வீழ்வதற்கு வழி சண்டை சச்சரவில் உள்ளது.

இஸ்லாத்தின் அனைத்து வழிபாடு முறைகளும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டுதான் அமைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

இது ஹஜ்ஜுடைய காலம். ஹஜ்ஜின் அனைத்து நடவடிக்கைகளும் ஒற்றுமையை மையமாக வைத்து கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தகைய ஒற்றுமையை இஸ்லாமிய வணக்க வழிபாடுகளும் குறிப்பாக ஹஜ்ஜும் உலக மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. முஸ்லிம்கள் அனைவரும் உலகளாவிய ஒற்றுமைக்காக குரல் கொடுக்க வேண்டும்; பாடுபட வேண்டும்.

  மௌலவி .அ.செய்யது அலி மஸ்லஹி